கடந்த தேர்தலுக்குப் பின் இலங்கையில் ஜனநாயகம், நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் நம்பகத்தன்மையை ஏற்படுத்த வரலாற்று வாய்ப்பு ஒன்று கிடைத்துள்ளதென ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
சர்வதேசத்தின் ஆதரவுடன் இலங்கை மக்கள் நன்மை அடையக்ககூடிய அளவு சந்தர்ப்பம் தற்போது அமைந்துள்ளதென ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகத்தின் அரசியல் துறை பொறுப்பாளர் ஜெப்ரி பெல்ட்மென் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபை தலைமையகத்தில் இடம்பெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தனது இலங்கை விஜயம் குறித்து ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
கடந்த வாரமளவில் இலங்கைக்கு விஜயம் செய்த ஜெப்ரி பெல்ட்மென், இலங்கை ஜனாதிபதி, பிரதமர், வெளியுறவு அமைச்சர், ததேகூ தலைவர்கள் உள்ளிட்ட பல அரசியல் கட்சி தலைவர்களையும் சிவில் சமூக பிரதிநிதிகளையும் சந்தித்திருந்தார்.
யுத்தக் குற்றம் குறித்து இலங்கை அரசாங்கம் சர்வதேச தரம்வாய்ந்த உள்நாட்டு விசாரணை நடத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இலங்கையில் நல்லிணக்க ஒத்துழைப்பு குறித்து புதிய நம்பிக்கை பிறந்துள்ளதாக ஜெப்ரி பெல்ட்மென் நேற்றைய ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
ஆனாலும் இலங்கையில் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படாத நிலை தொடர்வதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இராணுவ குறைப்பு, காணி மீள ஒப்படைப்பு போன்ற விடயங்களில் இலங்கை அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கியதாக ஜெப்ரி பெல்ட்மென் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் வடக்கு பிரச்சினை தீர்வுக்கு அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை உதவத் தயார் என்றும் அது இலங்கை மக்களுக்கு நன்மையாக அமையும் என்றும் அவர் கூறியுள்ளார்.

