மதுசார உற்பத்தி மற்றும் விற்பனை நிலையங்களுக்கான அனுமதிப்பத்திரங்கள் இனிவரும் காலங்களில் அரசியல்வாதிகளுக்கு வழங்கப்படமாட்டாது. தேவையேற்படின் வழங்கப்பட்டுள்ள அனுமதிப்பத்திரங்கள் தொடர்பில் மேலதிகமான வரிகளை விதித்து அவற்றை மீளப்பெற்றுக் கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை அமர்வின்போது வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் அனுரகுமார திசாநாயக்க எம்.பி.யினால் எழுப்பப்பட்ட இடைக் கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
முன்னதாக கேள்வியெழுப்பிய ஜனநாயக தேசியக் கூட்டணி எம்.பி.யான அனுரகுமார திசாநாயக்க கூறுகையில்,
மதுபான உற்பத்தி விநியோகம் மற்றும் விற்பனை ஆகியவற்றுக்கு முன்னைய அரசாங்கம் அரசியல்வாதிகளுக்கும் அவர்களுக்கு நெருக்கமானவர்களுக்கும் அனுமதிப்பத்திரங்களை வழங்கியுள்ளது.
இதன் காரணமாகவே வரிகள் செலுத்தப்படாத நிலைமைகள் ஏற்பட்டுள்ளன. எனவே மதுசார உற்பத்தி விநியோகம் மற்றும் விற்பனை ஆகியவற்றை மையப்படுத்தி எதிர்காலங்களில் அனுமதிப்பத்திரங்கள் வழங்கும்போது அமைச்சர்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகள் புறக்கணிக்கப்பட வேண்டும். அத்துடன் அரசியல்வாதிகளுக்கு அனுமதிப்பத்திரங்கள் கிடைக்காதவண்ணம் அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா என்று கேள்வியெழுப்பினார்.
இக்கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் ரவிகருணாநாயக்க கூறுகையில்,
அரசியல்வாதிகளுக்கு மேற்படி அனுமதிப்பத்திரங்கள் நேரடியாக வழங்கப்படுவது கிடையாது. எனினும் கடந்த ஆட்சிக் காலத்தில் அனுமதிப்பத்திரங்கள் மறைமுகமாகவும் அதேநேரம் தவறான முறையிலும் விநியோகிக்கப்பட்டிருக்கின்றன. அவ்வாறான அனுமதிப்பத்திரங்களை தடைசெய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
எதனோல் வியாபாரத்தைப் பொறுத்தவரையில் ஜனவரி மாதம் 8ஆம் திகதிக்கு முன்னதாக அது பாரிய இலாபம் ஈட்டும் வியாபாரமாக இருந்திருக்க முடியும். எனினும் தற்போது எதனோல் இங்கு தடைசெய்யப்பட்ட வியாபாரமாக இருக்கிறது. இவ்விடயத்திலும் அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படமாட்டாது.
இதேவேளை பிரதமர் இங்கு கூறுகையில்,
மதுசாரம் தொடர்பான எந்தவொரு அனுமதிப்பத்திரத்தையும் எந்தவொரு அரசியல்வாதிக்கும் நாம் வழங்கு வதற்குத் தயாரில்லை. வழங்கவும் மாட் டோம்.
இது தொடர்பில் நாம் விசாரணைகளை மேற்கொள்வோம் என்பதுடன் தேவை யேற்படும் பட்சத்தில் ஏற்கனவே விநியோகிக் கப்பட்டிருக்கின்ற அனுமதிப்பத்திரங் களுக்கும் மேலாக வரிகளை விதித்து அவற்றை மீளப்பெற்றுக்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்க முடியும் என்றார்.

