உலகிலேயே முதன் முதலாக, முகம் பார்த்து பணம் கொடுக்கும் ஏடிஎம் சீனாவில் அமைக்கப்பட்டுள்ளது. வங்கிகளுக்கு செல்லாமலேயே ஏடிஎம் இயந்திரம் மூலம் பணம் எடுப்பது வசதியாகவும், எளிதாகவும் உள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் வங்கி கிளைகளுக்கு நேரடியாக செல்வதை விட ஏடிஎம் இயந்திரங்களில் பணம் எடுக்கின்றனர். டெபிட்கார்டு மூலமான பரிவர்த்தனையும் அதிகமாக உள்ளது. அதேநேரத்தில், டெபிட்கார்டு ரகசிய எண்களை தெரிந்து கொண்டு பணம் திருடும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க சிப் உடன் கூடிய கார்டுகள், ஆன்லைன் பரிவர்த்தனைக்காக கிரிட் கார்டுகள், ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் கார்டுகள் என வங்கிகள் புதுமையாக கண்டுபிடித்து வருகின்றன.
ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பாஸ்வேர்டும் பாதுகாப்பான பரிவர்த்தனைக்காக வாடிக்கையாளர்களுக்கு மொபைல் எண் மூலம் வழங்கப்படுகின்றன. சில நாடுகளில் வாடிக்கையாளர்களின் கைரேகை பதிவை வைத்து அடையாளம் கண்டு பணம் வழங்கும் ஏடிஎம் இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன.
இந்நிலையில் சீனாவில் முகம் பார்த்து பணம் வழங்கும் ஏடிஎம்மை கண்டுபிடித்துள்ளனர். சீனாவில் உள்ள செஜியாங் மாகாணத்தில் உள்ளது சிங்குவா பல்கலைக்கழகம். இந்த பல்கலைக்கழகமும் செக்வான் தொழில்நுட்ப நிறுவனமும் இணைந்து முகத்தை புரிந்து கொள்ளும் ஏடிஎம் இயந்திரத்தை உருவாக்கியுள்ளன.
மிக வேகமாக செயல்படக்கூடிய இந்த இயந்திரம், வாடிக்கையாளரின் முகத்தை பார்த்து உணர்ந்து பணத்தை வழங்கக்கூடியது. உயர் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் இந்த ஏடிஎம்மில் யாரும் மோசடி செய்ய முடியாது. ஏடிஎம் கார்டு ரகசிய எண்கள் திருடி பணம் எடுப்பது போன்ற குற்றங்கள் இந்த நவீன ஏடிஎம் மூலம் தடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
உரிய அனுமதிக்கு பிறகு வங்கிகளில் இது பயன்படுத்தப்பட உள்ளது. எல்லாம் சரி… ‘‘பிளாஸ்டிக் சர்ஜரி’’ செய்தால் இந்த இயந்திரத்தை ஏமாற்றி பணம் எடுக்க முடியுமா என்று சந்தேகம் எழுப்புகின்றனர் சில கில்லாடிகள்.