ரமழானை முன்னிட்டு 113 இந்திய மீனவர்களை விடுவித்தது பாகிஸ்தான்

புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 113 மீனவர்களை அந்நாட்டு அரசு விடுதலை செய்துள்ளது.

நல்லெண்ண நடவடிக்கையாக மீனவர்கள் விடுவிக்கப்பட்டதாக பாகிஸ்தான் அரசு கூறியுள்ளது. இஸ்லாமாபாத்திலிருந்து தங்களுக்கு இது குறித்த உத்தரவு வந்துள்ளதாக கூறிய மலிர் ஜெயில் துணை சூப்பிரண்டு முகமது ஹூசைன் செஹ்டோ , புனித ரமழான் மாதத்தை  முன்னிட்டு நல்லெண்ண நடவடிக்கையாக மீனவர்களை விடுவிக்குமாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதையடுத்து சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட  113 மீனவர்களும் லாகூருக்கு அனுப்பப்பட்டுள்ளனர். பின்னர் வாகா எல்லையில் வைத்து அவர்கள் இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக சிறையில் இருந்து வெளியே வந்த இந்திய மீனவர்களுக்கு பாகிஸ்தான் மீனவர்கள் சால்வையை பரிசாக தந்து அனுப்பிவைத்தனர்.