ISIS போராளிக் குழுவோடு இணைவதற்காக புறப்பட்டுள்ளனர் என்ற சந்தேகத்தின் பேரில் அவுஸ்திரேலியாவின் சிட்னி விமான நிலையத்தில் இரு பருவ வயதுச் சிறுவர்கள் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப் பட்டுள்ளனர்.
16 மற்றும் 17 வயதுச் சகோதரர்களான இவர்கள் இருவரும் பயணிகள் பரிசோதனைப் பிரிவைக் (customs) கடக்க முயன்ற போது சந்தேகத்தின் பேரில் தடுக்கப் பட்டதாக அவுஸ்திரேலிய குடியகழ்வுத் துறை அமைச்சர் பீட்டர் டுட்டொன் ஞாயிற்றுக் கிழமை தெரிவித்துள்ளார்.
இந்த சகோதரர்கள் பரிசோதிக்கப் பட்ட போது ஒரு பயண மூட்டையுடன் மத்திய கிழக்கில் குழப்பம் நிலவும் பகுதிகளுக்குச் செல்வதற்கான பெயர் பதியப் படாத டிக்கெட்டுக்களும் கைப்பற்றப் பட்டுள்ளன. மேலும் இச்சிறுவர்கள் கைது செய்யப் படவில்லை என்றும் விசாரணைக்குப் பின் அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப் பட்டதாகவும் தெரிவித்த டுட்டொன், இச்சிறுவர்களது உண்மையான நோக்கம் என்னவென்பது குறித்து இதுவரை தெளிவான விளக்கம் இல்லை எனவும் கூறியுள்ளார். மேலும் இந்த இரு இளைஞர்களும் சிறுவர்களே! கொலையாளிகள் அல்ல! எனவும் கூறிய டுட்டொன் இவ்விவகாரம் தொடர்பில் அவுஸ்திரேலிய ஃபெடரல் போலிசுக்கு அறிவிக்கப் பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். அவுஸ்திரேலியப் பிரதமர் டோனி அப்பொட் கூறுகையில், இவ்விரு சிறுவர்களும் அவுஸ்திரேலியக் குடியுரிமை உடையவர்களே என்ற போதும் தீவிரவாதிகளின் கொலை செய்யும் கலாச்சாரத்துக்கு (death cult) ஏனோ அடிமையாகி விட்டனர் என்றுள்ளார். இந்நிலையில் ஈராக்கிலும் சிரியாவிலும் தற்போது குறைந்தது 90 அவுஸ்திரேலியக் குடியுரிமை உடைய ஜிஹாதிஸ்ட்டுக்கள் ISIS இற்காக சண்டையிட்டு வருவதாக அந்நாட்டு அரசு கணித்துள்ளது.
மறுபுறம் சமீபத்தில் நைஜீரியாவுக்கும் அதன் அண்டை நாடுகளுக்கும் அச்சுறுத்தலாக விளங்கி வரும் போக்கோ ஹராம் போராளிகள் தாம் ISIS உடன் இணைந்து அவர்களது கலிஃபாவை ஏற்கிறோம் என ஆடியோ செய்தி வெளியிட்டிருந்தன. இதனை அடுத்து ஞாயிற்றுக்கிழமை சாட் மற்றும் நைகர் ஆகிய நாடுகள் வடகிழக்கு நைஜீரியாவில் போக்கோ ஹராமைக் குறி வைத்து தரை வழியாகவும், வான் வழியாகவும் பாரிய முற்றுகைத் தாக்குதலைத் தொடுத்திருப்பதாகவும் இதில் நூற்றுக்கும் அதிகமான துருப்புக்கள் பங்கேற்றதாகவும் செய்திகள் கூறுகின்றன. மேலும் மார்ச் 28 ஆம் திகதி நைஜீரியாவில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கு முன்பாக அங்கு போக்கோ ஹராம் வசமுள்ள அனைத்து நிலப் பரப்புக்களையும் கைப்பற்ற நைஜீரிய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் இதற்காகத் தாக்குதல்களைத் தீவிரப் படுத்தியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

