Breaking
Sat. Dec 6th, 2025

இனவாதம் சொல்லி அரசியல் செய்பவர்களுக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தழிழ், முஸ்லீம் மக்கள் ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களித்து இனவாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்கள் என்று மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தவிசாளருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்துள்ளார்.

நடைபெற்று முடிந்த பாராளுமன்ற பொதுத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக ஐக்கிய தேசிய கட்சியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தேர்தல் முடிவின் பின்னர் செவ்வாய்க்கிழமை இரவு ஒட்டமாவடியில் உள்ள தனது வீட்டில் ஆதரவாளர்கள் மத்தியில் உரையாடும் போதே இதனை தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாடுகையில்,
இனவாதம் பேசிக் கொண்டு அரசியல் செய்பவர்களுக்கு மத்தியில் இனவாதம் சொல்லாமல் மாவட்டத்தின் அபிவிருத்திக்கும், இன ஒற்றுமைக்கும்; 20 க்கு 20 என்ற 2020 ம் ஆண்டை நோக்கிய எனது திட்டங்களுக்கு மக்கள் தந்த அதிகாரமாகவே எனது வெற்றியை நினைக்கிறேன்.

எனது வெற்றிக்கு உதவிய மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தமிழ் முஸ்லீம் வாக்காளர்களுக்கும் என்னுடன் இணைந்து ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதுடன், அவர்களது ஒத்துழைப்புடன் இணைந்து மாவட்டத்தின் அபிவிருத்தியை மேற்கொள்வேன்.

எனது வெற்றிக்கு எதிராக செயற்பட்ட சகோதரர்கள் எல்லாம் என்னை எதிரியாக பார்த்துக்கொண்டு இருக்காமல் மாவட்டத்தின் அபிவிருத்திக்காக ஒன்றினைந்து செயற்படுவோம் அதற்காக என்னுடன் இணைந்து உங்களது நல்ல ஆலோசனைகளையும் தெரிவியுங்கள்.

நாட்டில் 2015ம் ஆண்டுடன் ஏற்பட்டுள்ள நல்லாட்சியில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் வழிகாட்டிலில் மாவட்டத்தின் அபிவிருத்தியை மேற்கொள்வேன் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

–வாழைச்சேனை நிருபர் –

Related Post