Breaking
Sun. Dec 7th, 2025

பதுளை மற்றும் மொனராகலை மாவட்டங்களை உள்ளடக்கிய ஊவா மாகாண சபைக்கான தேர்தல் வாக்களிப்பு இன்று காலை 07.00 மணிக்கு ஆரம்பமானது.

834 மத்திய நிலையங்களில் ஆரம்பமாகியுள்ள வாக்களிப்பு மாலை 04.00 மணிக்கு நிறைவு பெறும் என்று தேர்தல்கள் அத்தாட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனிடையே, தேர்தல்களுக்கான சகல ஏற்பாடுகளும் நேற்றையதினமே பூர்த்தி செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் உட்பட 12000 பேர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஆள் அடையாளங்களை உறுதிப்படுத்தக் கூடிய தேர்தல் திணைக்களத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அடையாள அட்டைகளை எடுத்துச் சென்று வாக்களிக்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் பதுளை மற்றும் மொனராகலை மாவட்ட வாக்காளர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

இரண்டு போனஸ் ஆசனங்கள் உட்பட 34 ஆசனங்களைக் கொண்ட ஊவா மாகாண சபைக்கு 617 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இரு மாவட்டங்களிலும் 9 இலட்சத்து 42 ஆயிரத்து 730 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இங்கு 835 வாக்குச்சாவடிகளும் ஐந்து வாக்கெண்ணும் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

மஹியங்கனை, வியாலுவ, பசறை, பதுளை, ஹாலிஎல, ஊவா பரணகம, வெலிமட, பண்டாரவளை, ஹம்புத்தளை, பிபிலை, மொனராகலை, வெல்லவாய ஆகிய தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. 12500 தேர்தல் திணைக்கள அதிகாரிகள் தேர்தல் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தேர்தலை முன்னிட்டு இரு மாவட்டங்களிலும் விசேட அதிரடிப்படையினர் உட்பட 12000ற்கும் அதிகமான பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

தேர்தல் தினமான இன்றும் அதன் பின்னர் ஒரு வாரத்துக்கும் ஊர்வலங்கள், பேரணிகள் நடத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வாக்கெண்ணும் ஐந்து நிலையங்களைச் சுற்றியும் தலா 500 விசேட அதிரடிப்படையினர் வீதம் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்படுவார்கள். தெரிவத்தாட்சி அலுவலகரின் அனுமதியின்றி எவரும் வாக்கெண்ணும் நிலையங்களுக்கு நுழைய முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

Related Post