கட்டுநாயக்கவில் விமானம் அவசரமாக தரையிறக்கம்

டுபாயிலிருந்து அவுஸ்திரேலிய நோக்கி பயணித்த எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான  A 380  விமானம்   அவசரமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.

குறித்த விமானத்தில் பயணித்த பயணி ஒருவருக்கு ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாகவே  விமானம் தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

75 வயதுடைய அவுஸ்திரேலிய நாட்டவர் ஒருவரே இவ்வாறு திடீர் சுகயீனத்துக்கு உள்ளானதாகவும் அவர் தற்போது நீர்கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் கட்டுநாயக்க விமானத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட குறித்த விமானம் மீண்டும் அவுஸ்திரேலியா நோக்கி பயணித்துள்ளது.

குறித்த விமானத்தில் 468 பயணிகளும், 35 விமான ஊழியர்களும் பயணித்தமை குறிப்பிடத்தக்கது.