களனி பிரதேசத்தில் இன்று விமானப்படை மீட்புப் பணிகள்!

களனி ஆற்றின் வெள்ளம் காரணமாக வீடுகளில் சிக்கிக் கொண்டுள்ள பொதுமக்களை மீட்கும் பணிகளில் இன்று விமானப்படையினர் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

மல்வானை, களனி, கொலன்னாவை, வெல்லம்பிட்டி பிரதேசங்களில் இந்த மீட்புப் பணிகள் இன்று முழுவதும் நடைபெறவுள்ளது.

இதற்காக விமானப்படையினரின் இரண்டு ஹெலிகொப்டர்களில் மீட்புக்குழுவினர் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

களனி ஆற்றில் பெருக்கெடுத்த வெள்ளம் காரணமாக சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

மேலும் அதிகரித்த நீர் மட்டம் காரணமாக தங்கள் வீடுகளுக்குள் சிக்கிக் கொண்டு வெளியேற முடியாது தவித்துக் கொண்டிருக்கின்றனர்.

இதனைக் கருத்திற் கொண்டு கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதுர சேனாரத்ன விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க அப்பிரதேசங்களில் மீட்புப் பணிகளில் ஈடுபட விமானப் படையினர் தீர்மானித்துள்ளனர்.

மல்வானை தொடக்கம் களனி, கொலன்னாவை, வெல்லம்பிட்டி பிரதேசங்களில் தங்கள் வீடுகளுக்குள் சிக்கிக் கொண்டுள்ளவர்கள் வீட்டுக் கூரைகளின் மீதேறி கைகளை ஆட்டிக் காட்டுவதன் மூலம் அல்லது கட்டில் விரிப்புகளை அசைத்துக் காட்டுவதன் மூலம் அவர்களை இலகுவாக இனம் கண்டுகொள்ள முடியும் என்று மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

வெள்ளத்தில் சிக்கி வெளியேற முடியாது தவிக்கும் தமது உறவினர் நண்பர்களுக்கு உடனடியாக இத்தகவல்களை தெரியப்படுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சதுர சேனாரத்ன வேண்டுகோள் விடுத்துள்ளார்.