Breaking
Fri. Dec 5th, 2025

யாழ்ப்பாணம், உடுப்பிட்டி பகுதியிலுள்ள வீடொன்றின் குழாய்க் கிணறு அருகிலிருந்த கிடங்கிற்குள் பூட்டப்பட்டிருந்த மோட்டாரை பழுதுபார்க்க நேற்று புதன்கிழமை (02) மாலை குறித்த கிடங்கினுள் இறங்கிய இருவர் மர்மான முறையில் இறந்துள்ளதாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர். புலோலி பகுதியைச் சேர்ந்த எஸ்.மகாநாயகம் (வயது 56), பருத்தித்துறையைச் சேர்ந்த என்.கிருஸ்ணமூர்த்தி (வயது 61) ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். மேற்படி பள்ளத்தில் பொருத்தப்பட்டிருந்த மோட்டார் பழுதடைந்ததையடுத்து, அதைத் திருத்துவதற்காக ஒருவர் கிடங்கினுள் இறங்கியுள்ளார். இறங்கியவர் எவ்வித சத்தமும் இல்லாமல் இருப்பதை அவதானித்த மற்றைய நபரும் கிடங்கினுள் இறங்கியுள்ளார். கிடங்கினுள் இறங்கிய இருவரும் வெளியில் வராததையடுத்து, வீட்டுக்காரர் கிடங்கைப் பார்த்த போது, இருவரும் உயிரிழந்த நிலையில் இருந்துள்ளனர். பருத்தித்துறை பதில் நீதவான் திருமதி உருத்திரேஸ்வரன் விஜயராணியின் உத்தரவுக்கமைய, இருவரது சடலமும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சவச்சாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. குறித்த இருவரும் கிடங்கினுள் விச வாயு காரணமாக மூச்சுத் திணறி உயிரிழந்தனரா? அல்லது மின்சாரம் தாக்கி உயிரிழந்தனரா? என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

By

Related Post