கோட்டபாய குறித்து சட்டமா அதிபரிடம் ஆலோசனை

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்சவை சந்தேக நபராக குறிப்பிடுவது குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனை கோரப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்ற உத்தரவினை மீறி, லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவிற்கு எதிரில் போராட்டம் நடத்தியமை தொடர்பான சம்பவமொன்றில், கோட்டபாயவை சந்தேக நபராக குறிப்பிட முடியுமா என்பது தொடர்பில் சட்ட மா அதிபரின் ஆலோசனை பெற்றுக் கொள்ளப்பட உள்ளதாக பொலிஸார் நேற்று நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.
நீதிமன்ற உத்தரவினை மீறி பொதுமக்களின் அமைதிக்கு பங்கம் ஏற்படும் வகையில் போராட்டம் நடத்தியதாக அரசியல்வாதிகள், பௌத்த பிக்குகள் உள்ளிட்ட சில தரப்பினருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்தப் போராட்டத்தில் பங்கேற்றவர்களை இறுதியில் அழைத்து நன்றி தெரிவித்த காரணத்தினால் கோத்தபாயவும் நீதிமன்றை அவமரியாதை செய்ததாக மத்திய மாகாணசபை உறுப்பினர் ஒருவரும் சட்டத்தரணிகளும் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போராட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் நிறுவனங்கள் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, கலகொடத்தே ஞானசார தேரர், முரத்தட்டுவ ஆனந்த தேரர், மெதகொட அபயதிஸ்ஸ தேரர், பெங்கமுவ நாலக்க தேரர், இத்தேகந்த சத்தாதிஸ்ஸ தேரர் உள்ளிட்ட சில பௌத்த பிக்குகள் இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளனர்.
டலஸ் அழகப்பெரும, ஜனக பிரியந்த பண்டார, சரத் வீரசேகர, ரொசன் ரணசிங்க, ஜயந்த கெட்டகொட, உதித்த லொக்குபண்டார, பந்துல குணவர்தன, பிரசன்ன ரணதுங்க, உதய கம்மன்பில, காமினி லொக்குகே, எஸ்.எம். சந்திரசேன, உபாலி கொடிகார, மதுமாத அரவிந்த போன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளுராட்சி மன்ற அரசியல் பிரதிநிதிகள் உள்ளிட்டவர்களும் இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
இந்த மனு மீதான விசாரணைகள் எதிர்வரும் 17ஆம் திகதி மீளவும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.