நிபந்தனைகள் இன்றி இலங்கைக்கு கடன் மற்றும் நிவாரணங்களை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் இணக்கம் தெரிவித்துள்ளது.
நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் சர்வதேச நாணய நிதி அதிகாரிகள் ஆகியோரிடையே பெரு நாட்டின் தலைநகர் லீமாவில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
இந்த தீர்மானம் நாட்டின் அபிவிருத்திக்கு பாரிய பங்களிப்பினை வழங்கும் என பெரு நாட்டிலிருந்து தெரிவித்த நிதியமைச்சர் நியூஸ்பெஸ்ட்டுக்கு கருத்து தெரிவித்தார்.
இலங்கையின் அரசியலில் ஏற்பட்டுள்ள புரட்சிகரமான மாற்றத்தின் மூலம் சர்வதேச நாணய நிதியம் கடன்வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது.
கடன் மற்றும் உதவிகளை வழங்குவதற்கு சர்வதேச நாணயநிதியம் எவ்வித நிபந்தனைகளையும் முன்வைக்கவில்லையென நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான கடன்களை பெற்றுக் கொள்வதன் மூலம் மக்களின் வரிச்சுமை அதிகரிக்கப்படும் என சிலர் குற்றஞ்சுமத்துவது நியாயமற்றது எனவும் , அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் நாட்டின் இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்புகளை பெற்றுக் கொடுத்தல், கல்வி, மற்றும் சுகாதார துறைகளை மேம்படுத்தல், மற்றும் பெண்களின் வாழ்வினை மேம்படுத்தல் ஆகியவற்றை மையப்படுத்தி உதவிகள் வழங்கப்படுவதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
பெரு நாட்டின் தலைநகரான லீமாவில் ஆரம்பமான உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்த மாநாட்டின் போது அதன் பிரதானிகளுடன் நிதியமைச்சர் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளார்.

