Breaking
Mon. Dec 15th, 2025

அப்துல்லாஹ்: சரீரப் பிணையில் செல்ல நீதிமன்றம் உத்தரவு வழங்கியும் பிணை எடுக்க எவரும் முன்வராத நிலையில் 10 வருடமாக சிறையிலேயே காலங்கழித்த கைதியொருவர் வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு சிறையில் மரணமாகியுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடியைச் சேர்ந்த 70 வயதுடைய பஷீர் சேகுதாவூத் என்பவரே சிறையிலிருந்தவாறு மரணித்துள்ளார். இந்தக் கைதிக்கு உறவினர்கள் எவரும் இல்லை என்கின்ற நிலையில் இவரை சரீரப் பிணையில் வெளியில் எடுக்க யாரும் முன்வரவில்லை.

சுமை தூக்கும் தொழிலாளியான இவரை முதலாளி ஒருவர் கிண்டலடித்தார் என்பதற்காக முதலாளியின் தலையில் பொல்லால் தாக்கி அவரைக் கொலை செய்தார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டிருந்தார்.

இவருக்கு கடந்த 10 வருடங்களுக்கு முன்னரே நீதிமன்றம் சரீரப் பிணை வழங்கியிருந்தது. எனினும் பிணையெடுக்க எவரும் முன்வராததால் தொடர்ந்தும். சிறையிலேயே காலங்கழித்தார்.
நேற்றிரவு சுகவீனம் ஏற்பட்டதால் சிறைக்காவலர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்துள்ளனர். அப்போது அவர் மரணமடைந்தார். சடலம் அரச செலவில் அடக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

Related Post