மகன்மார் கைது செய்யப்படும்வரை ஏன் காத்திருக்க வேண்டும்?

அரசை கவிழ்க்க தெரிந்தால் தனது மகன்மார் கைது செய்யப்படும்வரை ஏன் காத்திருக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் கேள்வி எழுப்பியுள்ளார்.

நேற்று (13) மாலை கிண்ணியாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றிலேயே இம்ரான் மஹரூப் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

இந்த அரசை கவிழ்ப்பதாக கூறிக்கொண்டு கூட்டு எதிர்க்கட்சியினர் மக்கள் முன் தவறான கருத்துக்களை பரப்பி வருகின்றனர். அவர்கள் எங்கள் மீது சுமத்தும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் அவர்கள் அமைச்சர்களாக இருக்கும்போது செய்தவை. இப்போது அவர்களாகவே அதை வெளிக்கொண்டு வருகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.

ஒரு அமைச்சருக்கு வாகனம் கொள்வனவு செய்வது வீன்செலவாக தெரிந்த விமல் வீரவன்சவுக்கு, தனது அமைச்சினால் 30க்கும் மேற்பட்ட வாகனங்களை வாடகைக்கு அமர்த்தி மாதாந்தம் கோடிக்கணக்கில் வாடகை செலுத்துவது மாத்திரம் அத்தியாவசியமா? என இம்ரான் மஹரூப் கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசை கவிழ்ப்பது ஒன்றும் பெரிய விடயமல்ல என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஊடகங்களின் முன்னிலையில் கூறுகின்றார். அவ்வாறு அவருக்கு அரசை கவிழ்க்க தெரிந்திருந்தால் ஏன் தனது மகன்மார் கைது செய்யப்படும்வரை காத்திருக்க வேண்டும், நேற்றோ நேற்று முன்தினமோ அரசை கலைத்து நாமல் ராஜபக்ச சிறைக்கு செல்வதை தடுத்திருக்கலாம் என குற்றம் சுமத்தினார்.

“தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகின்றேன்” என்று தோல்வியடைந்ததில் இருந்து கூறுகின்றார். ஆனால் இதுவரை ஒன்றையும் காணவில்லை, அதேபோன்றுதான் இவரால் தனிக்கட்சியும் ஆரம்பிக்க முடியாது, அரசையும் கவிழ்க்க முடியாது. என கூறினார்.

கண்டியில் இருந்து கொழும்பு வரையல்ல இவர்கள் காங்கேசன்துறையிலிருந்து தேவேந்திர முனை வரை பாதயாத்திரை சென்றால் கூட இவர்களால் எதிர்வரும் நாட்களில் இடம்பெறவுள்ள கைதுகளையோ நல்லாட்சி அரசையோ ஒன்றும் செய்ய முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் தெரிவித்தார்