மக்காவை படம் பிடித்த துபாய் செயற்கைகோள்

2013-ம் ஆண்டு துபாய்சாட்-2 செயற்கை கோள் விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. உயர்தரமான படங்களை பிடிக்கும் வகையில் இந்த செயற்கைகோள் ஏற்படுத்தப்பட்டது.

இது அமீரகத்தின் இரண்டாவது தயாரிப்பாகும். இதனை அமீரகம் மற்றும் கொரியாவைச் சேர்ந்த என்ஜீனியர்கள் இணைந்து உருவாக்கினர். இந்த செயற்கைகோள்  தயாரிப்பில்  அமீரக  என்ஜீனியர்களின் பங்கு மகத்தான ஒன்று.

உலக முஸ்லிம்கள் ரமலான் மாதத்தை அனுசரித்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில் துபாயைச் சேர்ந்த செயற்கைகோள் மெக்காவை படம் பிடித்து அனுப்பியுள்ளது.

இந்த படத்தை முகம்மது பின் ராஷித் விண்வெளி மையம் வெளியிட்டுள்ளது. இதில் மெக்கா நகரில் உள்ள புனித பள்ளிவாசல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்கள் தத்ரூபமாக காணப்படுகிறது.

இந்த விண்வெளி படம் உயர் ரக படத்திறனை கொண்டுள்ளது. இந்த செயற்கைகோள் பிடித்து வரும் படங்கள் சுற்றுச்சூழல் திட்டங்கள், நகர மேம்பாடு, உள்கட்டமைப்பு முன்னேற்றம், பேரழிவு மேலாண்மை, வரைபடம் உருவாக்குதல், அறிவியல் ஆராய்ச்சி மற்றும் தேவையான சிறப்பு அறிக்கைகள் தயாரிக்க உதவும் வகையில் இருக்கிறது.

முகம்மது பின் ராஷித் விண்வெளி மையம் அடுத்த திட்டமாக துபாய்சாட்-3 செயற்கைகோள் திட்டம் உள்ளது. இந்த செயற்கைகோள் 2017-ம் ஆண்டு விண்வெளிக்கு  அனுப்பி  வைக்கப்படும்  என எதிர்பார்க்கப்படுகிறது.