முதியோர் இல்லங்கள் மேம்படுத்தப்பட வேண்டும்

நாடளாவிய ரீதியிலுள்ள சகல முதியோர் இல்லங்களினதும் வசதிகள் அனைத்தும் மேம்படுத்தப்பட வேண்டும், அதன் மூலம் முதியோர் இல்லங்களிலுள்ள முதியோர்கள் முகங்கொடுக்கும் சகல பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வுகள் வழங்கப்படுமென சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க தெரிவித்தார்.

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று(20) நடைபெற்ற முதியோர்களுக்கான தேசிய கொள்கைகளை உருவாக்கும் பொருட்டு மேற்கொள்ளப்படுகின்ற தேசிய கலந்துரையாடல் நிகழ்வின் ஆரம்ப வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், நாட்டிலுள்ள அனைத்து முதியோர் இல்லங்களினதும் வசதிகள் நரகத்தினைப் போன்றே உள்ளது. இவர்களுக்கான தூய்மையான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும். மேலும் எமது நாட்டினது முதியோர்களின் எண்ணிக்கை கடந்த காலத்தை விட வெகுவாக அதிகரித்துள்ளது. இதற்கு பிரதான காரணம் மக்களினது ஆயுட்காலம் அதிகரித்தமையே ஆகும். குறிப்பாக இலங்கையில் கடந்த 1952 ஆம் ஆண்டளவில் சராசரி மனிதனது ஆயுட்காலமானது 52 வயதாகவே காணப்பட்டது. எனினும் அது 60,65 வயது மட்டத்தை கடந்து தற்போது 70 ஆக அதிகரித்துக் காணப்படுகின்றது.

அத்துடன் இங்கு கருத்து தெரிவித்த அமைச்சர் தான் இப் புதிய அமைச்சினைப் பொறுப்பேற்றதன் பின்னர் முதியவர்களின் சிறந்த வாழ்வினை கருத்தில் கொண்டு அவர்களுக்கு மாதாந்தம் வழங்கப்படுகின்ற தொகையானது சுமார் 100 ரூபாவிலிருந்து 2000 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது எனவும் சுட்டிக்காட்டினார்.  இத்தொகையினை மாதாந்தம் பெறுபவர்களின் எண்ணிக்கை சுமார் 40 மில்லியன் பெறுமதியாகும். இவையனைத்தும் முதியோர்களின் புதிய மேம்பாடுகளுக்கு உதவும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.