ஓய்வூதிய கொடுப்பனவை வழங்குமாறு கோரி முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரப் தாக்கல் செய்திருந்த மனுமீதான விசாரணை மே மாதம் 14ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் விளக்கமறிக்குமாறு நாடாளுமன்ற செயலாளர் நாயகம், பிரதி செயலாளர் நாயகம் மற்றும் சட்டமா அதிபருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று திங்கட்கிழமை நோட்டீஸ் அனுப்பிவைத்துள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் விஜித் மலல்கொட மற்றும் எச்.சீ.ஜே. மடவள ஆகிய நீதியரசர்கள் கொண்ட குழுவினால் இந்த மனு விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது. தன்னுடைய கணவரான ஏ.எச்.எம் அஷ்ரப் மரணமடைந்ததன் பின்னர் விதவை ஓய்வூதியம் கிடைத்தது. எனினும் ,நாடாளுமன்ற உறுப்பினராக தான் சேவையாற்றி ஓய்வு பெற்ற 10 வருடங்களுக்கான ஓய்வூதிய கொடுப்பனவு இல்லாமல் செய்யப்பட்டமை அசாதாரணமானதாகும் என்று அவர், தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

