முஸ்லிம்கள் அமைதியற்று இருக்க முடியாது: இரா.சம்பந்தன்

– என்.எம்.அப்துல்லாஹ் –

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தினக் கூட்டம் 1-5-2016 அன்று யாழ்ப்பாணம் மருதனார்மடம் இராமநாதன் கல்லூரி மைதானத்தில் பெருந்திரளான மக்கள், கட்சிப்பிரமுகர்கள் மத்தியில் இடம்பெற்றது.

அதன்போது சிறப்புரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க் கட்சித்தலைவருமாகிய இரா சம்பந்தன் அவர்கள் “எமது பிராந்தியத்தில் முஸ்லிம்கள் அமைதியற்று இருக்க முடியாது” என்று குறிப்பிட்டார், நாம் ஒரு நீண்ட அமைதியற்ற காலத்தை கடந்துவந்திருக்கின்றோம்,

இவ்வாறான சூழ்நிலை மீண்டுமொருதடவை எமக்குத் தேவையற்றது, நாம் எமது பிராந்தியத்தில் அமைதியாக வாழ வேண்டுமாக இருந்தால் எமது சகோதர சமூகமாகிய முஸ்லிம் மக்களின் விடயத்தில் மிகவும் நீதமாகவும் நேர்மையாகவும் நடந்துகொள்தல் அவசியமாகும், அவர்களும் இந்த நாட்டின் ஒரு தேசிய இனம், அதில் எவ்வித கருத்து முரண்பாடுகளும் கிடையாது, இருக்கவும் முடியாது.

இதனை தந்தை செல்வா அவர்கள் வலியுறுத்தியிருக்கின்றார்கள். அவர்களுக்கும் பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன, அவற்றை அவர்களுடைய தலைவர்கள் முன்வைக்கின்றார்கள், நாங்கள் அவர்களோடு இதுகுறித்துப் பேசிவருகின்றோம்,

அவர்களுக்கு ஏற்புடைய தீர்வொன்றினை அவர்கள் முன்வைப்பார்கள் என்று நாம் எதிர்பார்க்கின்றோம், அவற்றை அவர்களுக்கு முழுமையாக வழங்கவேண்டிய கடமை எமக்கு இருக்கின்றது. இதிலே நாம் தவறிழைக்க முடியாது, அவ்வாறு நாம் தவறிழைத்தால் எமது பிராந்தியத்தின் அமைதிக்கு அது பாதிப்பாகவே அமையும், அதனை நாம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்; முஸ்லிம் மக்கள் எமது பிராந்தியத்தில் அமைதியற்று இருக்க நாம் இடமளிக்கக் கூடாது.

இதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தினப் பிரகடனத்தில் “முஸ்லிம் மக்கள் ஒரு தேசிய இனத்துவம் என்றும், அவர்களும் சுயநிர்ணய உரித்துடைய தனியான மக்கள் என்றும், அவர்களுக்கு ஏற்டைய தீர்வொன்றினை அவர்களுடைய தலைவர்களோடு கலந்துரையாடு பெற்றுக்கொடுப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திடசங்கற்பம் பூணுகின்றது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி மே தின நிகழ்வுகளில் பெரும்திரளான வடக்கு முஸ்லிம் மக்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.