முஸ்லிம் பாடசாலைக்கு இரண்டி மாடிக்கட்டிடம்: ஜனாதிபதி அடிக்கல் நாட்டினார்

பொலன்னறுவை முஸ்லிம் மத்திய கல்லூரிக்கான புதிய இரண்டு மாடிக் கட்டிடம் ஒன்றை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நாட்டிவைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் சொந்த மாவட்டமான பொலன்னறுவை மாவட்டத்தை அபிவிருத்தி செய்யும் நோக்கில் பொலன்னறுவை எழுச்சி (பிபிதெமு பொலன்னறுவ) என்றொரு அபிவிருத்தித் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

வார இறுதிநாட்களில் பொலன்னறுவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இத்திட்டத்தின் கீழான அபிவிருத்தி நடவடிக்கைகள் ஆரம்பித்துவைக்கப்பட்டது. பொலன்னறுவையில் தங்கியிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வைபவங்களின் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

இத் திட்டத்தின் கீழ் கதுருவல முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்திற்காக நிர்மானிக்கப்படவிருக்கும் இரண்டு மாடி கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று முற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  தலைமையில் கதுருவல முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

ஜனாதிபதியுடன் வடமத்திய மாகாண முதலமைச்சர் பேஷல ஹேரத், வடமத்திய மாகாண சபை உறுப்பினர் அன்சார் ஹாஜியார் உள்ளிட்ட பல அரசியல் பிரமுகர்களும் இந்த வைபவத்தில் கலந்து கொண்டனர்.

நிகழ்வின் பின்னர் பொலன்னறுவை முஸ்லிம் மத்திய கல்லூரி மாணவர்களுடன் சிநேகபூர்வ கலந்துரையாடல் ஒன்றிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.