லஞ்சத்திற்கு மன்னிப்பு கிடையாது

ஊழல் மோசடிகளில் ஈடுபடுவோரது தராதரம் பற்றி கவனம் செலுத்தப்படாது என லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தில்ருக்ஸி டயஸ் தெரிவித்துள்ளார்.
குற்றம் சுமத்தப்பட்டுள்ள முறைபாடுகள் கிடைக்கப்பெற்றுள்ள அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் பெரியவர்களா, அந்தஸ்தானவர்களா என்பது பற்றி கவனிக்கப்படாது.

பணிகளை சிறந்த முறையில் செய்வதனையே ஆணைக்குழு முதன்மையாக கருதும்.

லஞ்சத்திற்கு மன்னிப்பு கிடையாது. இது தொடாபில் திமிங்கலம், சுறா, நெத்தலி எல்லோருக்கும் சட்டம் ஒரே விதமாக அமுல்படுத்தப்படும்.

இந்த ஆண்டில் இதுவரையில் 3095 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

லஞ்ச ஊழல் மோசடி தொடுர்பில் உயர் நீதிமன்றில் 66 வழக்குகளும், நீதவான் நீதிமன்றில் 24 வழக்குகளும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.

புதிய ஆணைக்குழு முழு அளவில் செயற்படத் தொடங்கியதன் பின்னர், அதிகாரிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சிகள் வழங்கப்படும்.

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பயிற்சி வழங்குகின்றன, அந்தப் பயிற்சி எமது உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட வேண்டுமென தில்ருக்ஸி டயஸ் சிங்கள ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

அண்மையில் பன்னிரண்டரை கோடி ரூபா லஞ்சத்தை சுங்க அதிகாரிகள் சிலர் பெற்றுக் கொள்ள முயற்சித்த போது லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.