வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிராக ‘பிரேரணை கொண்டுவருவேன்’

‘இனங்களுக்கிடையே வெறுப்புணர்வைத் தூண்டும் பேச்சுகளுக்கு எதிரான தடைச் சட்டமொன்று உருவாக்கப்பட வேண்டிய அவசியம் குறித்து பலரும் வலியுறுத்தி வருகின்ற நிலையில், அந்த விவகாரம் தொடர்பில் விரைவில் தனிநபர் பிரேரணையொன்றைக் கொண்டுவருவேன்’ என்று ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

‘பொது பல சேனா செயலாளர் ஞானசார தேரர், முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதத்தைத் தூண்டும் விதத்திலான வெறுப்புக் கருத்துகளை, மஹியங்கனையில் வைத்துத் தெரிவித்திருந்தார். இது, கண்டிக்கத்தக்கதாகும்’ என்றும் அவர் குறிப்பட்டுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் அவர் அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் இனவாதிகளுக்கு களம் அமைத்துக்கொடுக்கப்பட்டிருந்தது.

இதனால், நாட்டில் இனக்குரோதம் வளர்க்கப்பட்டு அதன் எதிரொலியாக நாட்டில் பாரிய விபரீதங்கள் ஏற்பட்டன. 2015 ஜனவரியில் நாட்டு பற்றுள்ள மக்கள் இனவாதத்தை தோற்கடித்தனர். அத்துடன் இனவாதிகளின் கொட்டம் அடங்கிவிடும் என மக்கள் எதிர்ப்பார்த்தனர். ஆனால், அவர்கள் தொடர்ந்தும் இனவாதச் செயற்பாடுகளையே முன்னெடுத்துவருகின்றனர்.

இருந்தபோதிலும் முன்னர் இருந்தது போன்று ,பொதுபல சேனாவுக்கு அரசாங்கத்தின் ஆசிர்வாதம் இல்லை. அவர்களால் தற்போது எதனையும் செய்துவிட முடியாது. இப்போது அவர்களது கூட்டங்களை மக்கள் புறக்கணித்து வருகின்றனர்.

அவர்களால் மீண்டெழ முடியாது. இருப்பினும் அவர்கள், ஏனைய மதங்களைக் குறிவைத்து இனவாதக் கருத்துக்கள் மூலம் வெறுப்பு பேச்சுகளை தொடர்ந்து வருகின்றனர். இதனால் முஸ்லிம்களும் ஏனைய சிறுபான்மையினரும் அச்சமடைகின்றனர்.

இவ்வாறான நிலையில், வெறுப்புணர்வை தூண்டும் பேச்சுக்களை கட்டுப்படுத்தும் வகையில் தனிநபர் பிரேரணையையொன்றை முன்வைப்பேன் என்றும் அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளார்.