ஹெந்தவிதாரண, ரணவீரவின் நடவடிக்கைகளில் சந்தேகம்

முன்னாள் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் பணிப்பாளரும் தற்போதைய அம்பாறை சிரேஷ்ட பொலிஸ்அ த்தியட்சகருமான டி.ஆர்.எல்.ரணவீர, முன்னாள் உளவுத் துறை பிரதானி ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண ஆகியோர் பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜுதீனின் படுகொலையை தொடர்ந்து விசாரணை என்ற பெயரில் முன்னெடுத்த சில நடவடிக்கைகள் பாரிய

சந்தேகங்களை தோற்றுவித்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு கொழும்பு மேலதிக நீதிவான் நிஸாந்த பீரிஸுக்கு அறிக்கை சமர்பித்துள்ளது. இது குறித்த விசாரணைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும்

நிலையில், ஏற்கனவே பெறப்பட்ட சி.சி.ரி.வி.பதிவுகளை கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா தொழில் நுட்ப ஆய்வு நிறுவனத்துக்கு அனுப்புவது குறித்த நடவடிக்கைகள் பூரணப்படுத்தப் பட்டுள்ள தாகவும் இதற்கான வீஸா மற்றும் நடவடிக்கை செலவுகளைக் கோரி பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர சட்டம் ஒழுங்கு அமைச்சின்

செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் அமைச்சின் பதிலுக்காக காத்திருப்பதாகவும் குற்றப் புலனயவுப் பிரிவு மன்றை தெளிவுபடுத்தியுள்ளது.

வஸீம் தாஜுதீன் படுகொலை விவகாரம் தொடர்பிலான வழக்கு நேற்று கொழும்பு மேலதிக நீதிவான் நிஸாந்த பீரிஸ் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, குற்றப் புலனாய்வுப் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சர் டப்ளியூ.சி. விக்ரமசேகர, மனிதப் படுகொலைகள் தொடர்பிலான விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ரவீந்திர ஆகியோர் இது தொடர்பிலான விசாரணை அறிக்கையை மன்றுக்கு சமர்பித்தனர்.

வஸீம் தாஜுதீன் படுகொலை விவகார விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பில் ஆராய இது குறித்த வழக்கு நேற்று மீளவும் புதுக்கடை நீதிமன்றின் 5 ஆம் இலக்க கட்டிடத் தொகுதியில் உள்ள அறையில் மேலதிக நீதிவான் நிஸாந்த பீரிஸ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இதன்போது இந்த படுகொலை விவகாரத்தில் ஏற்கனவே, சாட்சிகளை மறைத்தமை மற்றும் சதி முயற்சி ஆகிய குற்றச் சாட்டுக்களின் கீழ் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் மேல் மாகாணத்தின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்க, நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்தின் முன்னாள் குற்றவியல் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் சுமித் சம்பிக்க பெரேரா ஆகியோர் சிறைச்சாலை அதிகாரிகளால் மன்றில் ஆஜர் செய்யப்பட்டனர்.

இதன்போது முதல் சந்தேக நபரான முன்னாள் குற்றவியல் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் சுமித் சம்பிக்க பெரேரா சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி அஜித் பத்திரணவும் 2 ஆம் சந்தேக நபரான முன்னாள் மேல் மாகாணத்தின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்க சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வாவும் பிரசன்னமாகினர்.

விசாரணையாளர்களான குற்றப் புலனாய்வுப் பிரிவு சார்பில் உதவி பொலிஸ் அத்தியட்சர் சி.டபிள்­யூ. விக்ரமசேகர, பிரதான பொலிஸ் பரிசோதகர் ரவீந்ர, சார்ஜன் ரத்னப் பிரிய ஆகியோருடன் அரசின் சிரேஷ்ட சட்டவாதி டிலான் ரத்நாயக்க மன்றில் அஜராகியிருந்தார்.

இந் நிலையில் விசாரணைகள் ஆரம்பமான போது குற்றப் புலனாய்வுப் பிரிவு கடந்த 14 நாட்களாக தாஜுதீன் விவகாரத்தில் முன்னெடுத்த விசாரணைகளின் சாராம்சம் நீதிவானுக்கு அறிக்கையாக சமர்பிக்கப்பட்டது.

அந்த அறிக்கையில் 11 விடயங்கள் குறித்து நீதிவானின் கவனம் திருப்பட்டிருந்தது.

சி.ஐ.டி. சமர்பித்த அறிக்கையின் சாராம்சம்

பொலிஸ் கண்கானிப்பு பிரிவின் சி.சி.ரி.வி. கமராக்களில் இருந்து சேகரிக்கப்ப்ட்ட வஸீம் தாஜுதீனின் வாகனம் பயணிக்கும் காட்சிகளைக் கொண்டதாக நம்பப்படும் சி.சி.ரி.வி. பதிவுகள் கனடாவில் உள்ள forensic video and surveillance technology laboratory british columbia institute of technology – canada என்ற ஆய்வு நிறுவனத்துக்கு அனுப்புவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் பூரணப்படுத்தப்ப்ட்டுள்ளன. இது தொடர்பில் பொலிஸ் மா அதிபர் ஊடாக சட்டம் ஒழுங்கு அமைச்சின் செயலாளருக்கு வீசா, ஆய்வுகூட செலவுகளைப் பெற்றுகொள்ள கடிதம் அனுப்பட்டுள்ளதுடன் அதற்கான பதில் இதுவரைக் கிடைக்கவில்லை.

அத்துடன் வஸீம் தஜுதீனின் கொலை இடம்பெற்ற தினத்தன்று காலை 6.00 மணிக்கும் 6.30 மணிக்கும் இடையிலான காலப்பகுதியில் கிருலப்பனை பொலிஸ் பிரிவின் ரொபர்ட் குணவர்தன மாவத்தையில் வைத்து பாஸ்கரன் என்பவரால் வஸீமின் பணப் பை கண்டெடுக்கப்பட்டு கிருளப்பனை பொலிஸில் ஒப்படைக்கப்பட்டிருந்தது. இது தொடர்பில் நாம் பாஸ்கரன் என்பவரை அழைத்து மீள விசாரணை செய்தோம். இதன்போது இந்த விடயத்துக்காக அவர் நாரஹேன்பிட்டி, கிருலப்பனை மற்றும் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸரினால் தலா இரு முறைகள் வீதம் விசாரிக்கப்பட்டதாக அவர் எம்மிடம் குறிப்பிட்டார். எனினும் குற்றத் தடுப்புப் பிரிவு விசாரணை செய்யவில்லை என்கிறது.

இதனைவிட வஸீம் தாஜுதீனின் படுகொலையின் பின்னர் அந்த இடத்தில் பொலிஸ் தடயவியல் பிரிவினரால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதாவது குற்றத் தடுப்புப் பிரிவினரால் பொரளை ஆய்வு கூடத்திலிருந்து சம்பவ இடம் தொடர்பிலான புகைப்படங்கள் கடந்த 2012.05.20 ஆம் திகதியன்ரு கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. இது தொடர்பில் அதனை எடுத்துச் சென்ற அப்போது கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவில் சேவையாற்றிய காண்ஸ்டபிளையும் நாம் கடந்தவாரம் விசாரணை செய்தோம். அதன்படி அப்போது குற்றத் தடுப்புப் பிரிவின் 5 ஆம் இலக்க பொறுப்பதிகாரியாக இருந்த தற்போது ஓய்வுபெற்றுள்ள பொலிஸ் பரிசோதகர் சுதேஷ் விஜேசிங்கவின் ஆலோசனைக்கு அமையவே கடமையைச் செய்து அதனை எடுத்து வந்ததாக தெரிவித்தார்.

இதனைவிட வஸீம் தாஜுதீனின் 0777554500 என்ற தொலைபேசி இலக்கம் தொடர்பில் குறித்த தனியார் தொலைபேசி சேவைகள் நிறுவனத்திடமிருந்து இரகசியமாக அறிக்கையும் பெறப்­பட்டுள்ளது. அதாவது கொழும்பு பிரதான நீதிவான் முன்னிலையில் விசாரணை செய்யப்படும் கொள்ளை தொடர்பிலான வழக்கொன்றின் தேவைக்கு என அறிவித்து இந்த இலக்கத்தின் அறிக்கைகளை பொலிஸார் பெற்றுள்ளனர். இது தொடர்பில் இந் நடவடிக்கையைச் செய்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரிடமும் அப்போதைய குறித்த த­னியார் தொலைபேசி நிறுவனத்தின் விசாரணை அதிகாரியாக கடமையாற்றிய பிரேமசிரி ரத்நாயக்க என்பவரையும் நாம் விசாரணை செய்தோம். அவர்களிடம் வாக்கு மூலமும் பெற்றுள்ளோம்.

பொலிஸ் கான்ஸ்டபிளின் வாக்கு மூலத்தின் படி அப்போது கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் பணிப்பாளராக இருந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ரணவீரவின் உத்தரவுக்கு அமைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் விஜேசிங்கவின் தலமையிலேயே இந்த நடவடிக்கைகள் இடம்பெற்றதாக தெரிவித்துள்ளார்.

இந் நிலையில் தற்போது பிரபல தனியார் நிறுவனம் ஒன்றின் பாதுகாப்பு ஆலோசகராக இருக்கும் ஓய்வு பெற்ற பொலிஸ் பரிசோதகர் விஜேசிங்கவை நாம் விசாரணை செய்தோம். இதன்போது சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ரணவீரவின் உத்தர்வுக்கு அமையவே தான் இந் நடவடிக்கைகளை செய்ததாக அவர் தெரிவித்தார்.

இதனைவிட தனியார் தொலைபேசி நிறுவனத்தின் அப்போதைய நிறைவேற்று விசாரணை அதிகாரியான பிரேமசிறி ரத்நாயக்கவிடம் செய்த விசாரணைகளில் குறித்த வஸீம் தாஜுதீனின் தொலைபேசி இலக்கத்தின் 2012.03.01 முதல் 2012.05.19 வரையிலான தொடர்பாடல் குறித்த பூரண அறிக்கை 2012.05.20 ஆம் திகதி பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளமை தெரியவந்தது. அத்துடன் அவரின் வாக்கு மூலத்தின் படி அப்போதைய உளவுப் பிரிவு பிரதானி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதரவின் கோரிக்கைக்கு அமையவே அந்த அறிக்கை வழங்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. அத்துடன் அந்த அறிக்கையானது மின்னஞ்சல் ஊடாகவே வழங்கப்பட்டுள்ளதுடன் sudesh@yahoo.com என்ற மின்னஜ்சலுக்கே அது அனுப்பட்டுள்ளது. இந்த மின்னஞ்சல் குறித்து விசாரணை செய்தபோது அது பொலிஸ் பரிசோதகர் சுதேஷ் விஜேசிங்கவினுடையது என்பது தெரியவந்துள்ளது.

எனவே கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் வஸீம் கொலை தொடர்பில் ஏதோ ஒரு மட்டத்தில் விசாரணை இடம்பெற்றுள்ளது. இப்படி விசாரணை இடம்பெற்ற போதும் மூன்று நட்களில் வஸீமிம் படுகொலையை விபத்து எனக் கூறி பொலிஸ் உயர் அதிகாரிகள் முடிவெடுத்தமை எமக்கு பாரிய சந்தேகங்களை இவர்கள் தொடர்பில் ஏற்படுத்தியுள்ளது. எனவே இந்த நடவடிக்கைகள் குறித்து நாம் தொடர்ச்சியாக விசாரணைகளை முன்னெடுத்துள்ளோம்.

என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந் நிலையில் வழக்கு விசாரணைகள் ஆரம்பமான போது முதலில் கருத்துக்களை முன்வைத்த அரசின் சிரேஷ்ட சட்டவாதி டிலான் ரத்நயக்க,

கனடாவுக்கு சி.சி.ரி.வி. காட்சிகளை அனுப்பிய பின்னர் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாவது ஆய்வு அறிக்கையைப் பெற்றுக்கொள்ள எதிர்ப்பார்ப்பதாகவும், பணப்பை மீட்கப்பட்ட விவகாரம், சம்பவ இடத்தை புகைப்பட ஆதரமாக்கிய பொலிஸ் அதிகாரிகள் தொடர்பிலும் விசாரணைகள் பிரத்தியேகமாக இடம்பெறுவதாகவும் மன்றுக்கு அறிவித்தார்.

டிலான் ரத்நாயக்கவின் வாதம்

உண்மையில் இந்த விவகாரம் தொடர்பில் எமக்கு பாரிய சந்தேகம் ஒன்று உள்ளது. அதாவது முன்னாள் புலனாய்வுப் பிரிவு பிரதானி ஒருவர் வஸீம் தாஜுதீனின் தொலைபேசி விபர­ப்பட்டியலை ஏன் பெற வேண்டும். அதுவும் ஞாயிறு தினமொன்றில் அவர் இந்த பட்டியலை கோரியிருக்கிரார். இதற்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை தொடர்கிறது.

அத்துடன் குற்றவியல் சட்டத்தின் 127 ஆவது அத்தியாயத்துக்கு அமைய முதலாவது சந்தேக நபர் செய்துள்ள வாக்கு மூலத்தை ஆராய்ந்த பின்னர் அவரது கோரிக்கை பரிசீலிக்கபப்டும் . எனவே சந்தேக நபர்கள் இருவரையும் கடந்த தவணையில் முன்வைக்கப்பட்ட காரணிகளை அடிப்படையாகக் கொண்டு தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க கோருகிறேன்.

சந்தேக நபர்களுக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் 32 ஆவது உறுப்புரையுடன் சேர்த்து பார்க்கபப்டும் 113 (ஆ), 296 ஆகிய அத்தியாயங்கலுக்கு அமைவாக சந்தேக நபர்களுக்கு எதிரக குற்றச் சாட்டு உள்ளது. எனவே அவர்களுக்கு பிணை வழங்க வேண்டாம். என்றார்.

மருத்துவ சபையின் விளக்கம்

இதனைத் தொடர்ந்து வஸீம் தாஜுதீனின் சடலம் மீது முதலில் பிரேத பரிசோதனைசெய்த வைத்தியர் ஆனந்த சமர்சேகர மீதான விசாரணைகள் குறித்து நீதிவான் நிஸாந்த பீரிஸினால் அந்த சபை சார்பில் வந்த சட்­டத்­த­ர­ணி­யி­டம் வினவப்பட்டது.

இதற்கு பதிலளித்த மருத்துவ சபையின் சட்டத்தரணி, ஆனந்த சமரசேகர வைத்தியர் தனக்கு வழங்கப்பட்டுள்ள குற்றப் பத்திரிகை தொடர்பில் ஆட்சேபனங்களை முன்வைத்துள்ளதால் அவருக்கு அது தொடர்பில் கால அவகாசம் வழங்­கப்­பட்­டுள்ளதாகவும் அதனால் அவருக்கு எதிரான விசாரணைகள் ஜூலை 23 ஆம் திகதி இடம்பெற திகதி குறிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அத்துடன் அவரது உதவியாளர்களான வைத்தியர் அமர ரத்ன, ராஜகுரு ஆகிய இருவருக்கும் எதிரான விசாரணைகள் ஜூலை 9 ஆம் திகதி இடம்பெறவுள்ளன.

மருத்துவ சபையின் ஒழுக்கக் கோவை சுற்று நிருபம், மருத்துவ கட்டளைச் சட்டங்களுக்கு அமைவாகவே இந்த கால அவகாசம் இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே விசாரணை நிறைவுற்­ற­தும் அது தொடர்பில் விரைவில் அறிக்கை சமர்பிக்க எதிர்ப்பார்க்கின்றோம். என்றார்.

தொலைபேசி நிறுவனங்களின் ஒத்துழைப்பு கிடைக்கின்றன

இதனையடுத்து நீதிவான் நிஸாந்த பீரிஸ், விசாரணைகளுக்கு டயலொக், மொபிடல் நிறுவனங்களின் ஒத்துழைப்பு கிடைக்கின்றனவா என கேள்வி எழுப்பட்டது. இதற்கு அமைய டயலொக் நிறுவனமும் மொபிடலும் விசாரணைக்கு தேவையான அனைத்து தகவல்களையும் வழங்கி உதவுவதாக இதன்போது சட்ட மா அதிபர் தினைக்களத்தின் சார்பில் ஆஜராகியிருந்த சிரேஷ்ட சட்டவாதி டிலான் ரத்நாயக்க மன்றுக்கு பதிலளித்தார்.

இதனையடுத்து முதலாவது சந்தேக நபரான நாரஹேன்பிட்டி முன்னாள் குற்றவியல் பொறுப்பதிகாரி சுமித் சம்பிக்க பெரேராவின் சார்பில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி அஜித் பத்திரண வாதங்களை முன்வைத்தார்.

அஜித் பத்திரணவின் வாதம்

கனம் நீதிவான் அவர்களே, எனது சேவை­பெ­று­னரின் விசாரணைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குகின்றார். உங்­க­ளிடம் குற்­ற­வி­யல் சட்டத்தின் 127 ஆவது அத்தியாயத்தின் கீழ் அவர் வழங்கியுள்ள ஒப்புதல் வாக்கு மூலத்தின் படி அவர் அனைத்தையும் தெரிவித்துள்ளார்.

எனவே மஹநாம எதிர் சட்ட மா அதிபர், சிசிலியா பிணை மனு தொடர்பிலன வழக்குகளை முன்மாதிரியாகக் கொண்டு எனது சேவை பெறுநருக்கு பினை வழங்குமாறு கோருகின்றேன். என்றார்.

இதனையடுத்து 2 ஆவது சந்தேக நபரான அனுர சேனநாயக்க சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அணில் சில்வா பிணை கோரி வாதிட்டார்.

அனுர சேனநாயக்கவுக்கு சிறு நீரக கோளாறு, இருதய நோய் மற்றும் புற்று நோய் கனம் நீதிவான் அவர்களே, எனது சேவை பெறுநரின் ஆரோக்கிய நிலைமையை விஷேட நிலைமையாக கருத்தில் கொண்­டு பிணை கோருகின்றோம். உங்களிடம் எனது சேவை பெறுநர் தொடர்பிலான வைத்திய அறிக்கை சமர்பிக்கப்பட்டிருக்கும். ஏற்கனவே நான் கடந்த தவனையில் சுட்டிக்காட்டிய நோய் நிலைமைகளுக்கு அமைவாக அரச வைத்தியசாலையொன்றில் அவருக்கு கடந்த நாட்களில் சிகிச்ட்சை வழங்கப்பட்டன.

நீதிமன்றில் இன்று ( நேற்று) ஆஜராக வேண்டும் என்பதை வலியுறுத்தி நானே அவரை இன்ரு சிறைச்சாலை அதிகாரிகள் ஊடாக இங்கு வரச் சொன்னேன்.

எனது சேவை பெறுநருக்கு பினை வழ்னக்க இந்த வைத்திய அறிக்கை எந்த வகையில் தாக்கம் செலுத்துகிறது என்பதையும் நான் இங்கு சுட்டிக்காட்டுகிறேன்.

எனது சேவை பெறுநருக்கு சிறு நீரகம் தொடர்பிலான பிரச்சினை உள்ளது. இது குறித்து அவர் வழமையக கடந்த 10 வருடங்களுக்கு மேலாக சிகிச்சைப் பெற்று வரும் சூல ஹேரத் வைத்தியரின் அறிக்கையும் சமர்பிக்கப்ப்ட்டுள்ளது.

இதனைவிட வைத்தியரின் அறிக்கையின் பிரகாரம், இதனைவிட கடுமையான நோய் நிலைமையொன்றும் எனது சேவை பெறுநருக்கு உள்ளது. அதாவது இருதய கோளாறு அவருக்கு இருக்கின்றது. இது தொடர்பில் வைத்தியரின் ஆலோசனைகள் உள்ளன. இது குறித்து சரியான வைத்திய சிகிச்சைகள் இல்லையெனில் மரணம் கூட நிகழலாம். இதனைவிட அவருக்கு புற்று நோய் ஏற்படுவதற்கான ஆரம்பகட்ட நிலைமைகள் தென்படுவதாகவும் வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர். எனவே அதற்கான சரியான சிகிச்சைகளும் தேவைப்படுகின்றன.

இல்லையேல் சந்தேக நபரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும். அப்படி அச்சுறுத்தல் ஏற்பட்டால் அவர் இறந்த பின்னர் யாருக்கு எதிராக விசாரணை செய்யப் போகிறீர்கள்?

சி.சி.ரி.வி தொடர்பில் அறிக்கை கிடைக்க இன்னும் 3 மாதங்கள் வரைச் செல்லும். ஏனைய விசாரணைகளும் நிறைவு பெறாத நிலையில் அவற்றுக்கும் சுமார் 2 மாதங்கள் வரைச் எல்லும். அப்படி இருக்கையில் எனது சேவை பெறுநருக்கு மருத்துவ காரணிகளைக் கருத்தில் கொண்டு பிணை வழங்­கக் கோருகிறேன். என்றார்.

அரச சட்டவாதி கடும் எதிர்ப்பு

எனினும் மன்றில் இருந்த அரச சிரேஷ்ட சட்டவாதி டிலான் ரத்நாயக்க அனில் சில்வாவின் கோரிக்கைக்கு ஏற்ப பிணை வழங்­கக் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டார்.

தனிப்பட்ட வைத்தியர் ஒருவரின் அறிக்கையை வைத்துக்கொண்டு முடிவெடுக்க முடியாது எனவும் சிறைச்சாலை வைத்தியசாலையின் பணிப்பாளரின் அறிக்கையை வைத்தே நீதிவான் தீர்மானங்களை எடுக்க வேண்டும் எனவும் டிலான் ரத்நாயக்க சுட்டிக்காட்டினார்.

அத்துடன் 2 ஆவது சந்தேக நபரை மட்டும் விஷேடமாக கவனிப்பதையும் தான் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என அவர் கூறினார்.

அனில் சில்வாவின் பிரதிவாதம்

இதனையடுத்து மீளவும் வாதிட்ட ஜனாதிபதி சட்டத்தரணி அணில் சில்வா தான் விஷேட சலுகை கோரவில்லை எனவும் எல்லோருக்கும் வழங்கப்படும் சலுகையையே கேட்பதாகவும் மருத்துவ காரணிகளுக்காக பிணை வழங்­க எத்தகைய தடையும் இல்லை எனவும் வாதிட்டார்.

மீளவும் டிலன் ரத்நாயக்கவின் விளக்கம்

சந்தேக நபருக்கு எதிராக பிணை சட்டத்தின் 13, 14 ஆம் அத்தியாயங்கள் கீழ் வாதங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. 32 ஆவது உறுப்புரையுடன் பேசப்படும் 113,296 ஆவது அத்தியாயங்களின் கீழான குற்றச் சாட்டுக்களுக்கு பினை வழங்கும் அதிகாரம் நீதிவான் நீதிமன்றுக்கு இல்லை. எனவே அது தொடர்பில் மேல் நீதிமன்றம் சென்ரே கோர வேண்டும். எனவே பிணை வழங்குவதை முற்றாக எதிர்க்கின்றோம். என்றார்.

இதனையடுத்து நீதிவான் திறந்த மன்றை அழைத்தார்.

இரு பக்க வாதங்கள் மற்றும் முன்னைய வழக்கின் முன்மாதிரிகள் மற்றும் மேலதிக விசாரணை அறிக்கையின் 10 ஆவது பந்தியில் கூறப்பட்டுள்ள விடயம் ஆகியவற்றைக் கருத்தில் கொன்டு பிணை கோரிக்கையை நிராகரிப்பதாக நீதிவான் அறிவித்தார்.

அத்துடன் அனுர சேன­நாயக்கவை உடனடியாக சிறைச் சாலை அதிகாரிகள் சட்ட வைத்திய அதிகாரி ஒருவரிடம் முன்னிலைப்படுத்தி அறிக்கை பெறுமாறும் அதனையும் சூல ஹேரத்தின் அறிக்கையையும் ஒப்பிட்டு அடுத்த கட்டம் ட்6ஹொடர்பில் தீர்மனிக்க முடியும் எனவும் நீதிவான் அறிவித்தார்.

அத்துடன் முதலாவது சந்தேக நபரின் 127 ஆவது அத்தியாயத்தின் கீழான ஒப்புதல் வாக்கு மூலம் சட்ட மா அதிபருக்கு அனுப்பட்டுள்ள நிலையில் அவரின் ஆலோசனைக்கு அமைய பினை குறித்து மற்றொரு தினத்தில் ஆராயலாம் எனவும் நீதிவான் அறிவித்தார். இதனையடுத்து மேலும் 14 நாட்களுக்கு சந்தேக நபர்கள் இருவரினதும் விளக்கமறியலை நீடித்த நீதிவான் வழக்கை மீளவும் ஜூலை 7 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக அறிவித்தார்.