பாராளுமன்ற வீதியினை மறிக்கும் மாணவர்களின் போராட்டத்திற்கு தடை!

பாராளுமன்ற வீதிக்குள் பிரவேசித்தல் மற்றும் அதனை தடை செய்து ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ளுதல் போன்றவற்றிற்கு நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

கடுவெல நீதவான் நீதிமன்றின் ஊடாகவே இத்தடையுத்தரவு காவல்துறையினரால் பெறப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக ஆணைக்குழுவுக்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கணக்கியல் உயர் தேசிய டிப்ளோமா மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து , இன்று முன்னெடுக்கப்படவிருந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்துக்கே இவ்வாறு காவல்துறையினர் தடையுத்தரவு பெற்றுக்கொண்டுள்ளனர்.

இதேவேளை இன்று ஶ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்திற்கு முன்னிருந்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வரை ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று மாணவர்களால் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனையடுத்து மாணவர்கள் ஆர்ப்பாட்டப் பேரணிகளை மேற்கொள்ள வேண்டுமாயின் வீதிகளுக்கு இடையூறு ஏற்படாமல் அதனை முன்னெடுக்க வேண்டும் என நுகேகொடை நீதிமன்றம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.