திலக் மாரப்பனவின் பதவி விலகல் மிகச்சிறந்த முன்னுதாரணம்: மங்கள சமரவீர

முன்னாள் அமைச்சர் திலக் மாரப்பனவின் பதவி விலகல் அரசியலில் மிகச்சிறந்த முன்னுதாரணம் என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் மங்கள சமரவீர, அவண்ட் கார்ட் விவகாரத்தில் அரசாங்கம் கடும் நெருக்கடிக்குள் சிக்கிக் கொள்ள இருந்தது. அக்கட்டத்தில் முன்னாள் அமைச்சர் மாரப்பனவின் ராஜினாமா அரசாங்கம் மீது அழுந்திக் கொண்டிருந்த நெருக்கடியைத்தணிக்க உதவியது. அந்த வகையில் அவரது செயற்பாடு பாராட்டத்தக்க ஒரு முன்மாதிரியாகும்.

நாட்டுக்கு நல்லதோர் முன்மாதிரியை வழங்குவதற்கு திலக் மாரப்பனவின் நேர்மையும், நியாயமான எண்ணங்களுமே உந்துகோலாக அமைந்துள்ளன.

இலங்கை அரசியலில் சுமார் 28 வருடங்களுக்குப் பின்னரே கனவான் அரசியலின் தாற்பரியத்தை விளக்கும் வகையில் திலக் மாரப்பன தனது பதவியை ராஜினாமாச் செய்துள்ளார். ஆனால் ஊழல் மற்றும் மோசடிகளில் தொடர்புபட்டுள்ள ஏனைய அரசியல்வாதிகள் ஒருபோதும் இவ்வாறான முடிவுகளை நினைத்துக் கூட பார்ப்பதில்லை.

அவர்கள் தொடர்ந்தும் தங்கள் பதவியைக் காப்பாற்றிக் கொள்ளவே முயற்சி செய்வார்கள்.

அந்த வகையில் திலக்மாரப்பனவின் ராஜினாமா, தெளிவான அரசியல் முன்மாதிரியொன்றை வழங்கியுள்ளது என்றும் அமைச்சர் மங்கள சமரவீர பாராட்டுத் தெரிவித்துள்ளார்.