பாகிஸ்தானில், லாகூர் நகரிலுள்ள பூங்கா ஒன்றில் இடம்பெற்ற வெடிகுண்டுத் தாக்குதலில் குறைந்தது 60 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் செய்திகள் வௌியாகியுள்ளன.
காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் சிறுவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்த பூங்காவுக்கு அருகில் குறித்த தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதோடு, குறித்த பூங்காவில் பல குடும்பங்கள் ஈஸ்டர் ஞாயிறு நிகழ்வுகளை கொண்டாடிக் கொண்டிருந்தனர் எனவும் வௌிநாட்டு ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.
இந்தத் தாக்குதலில் காயமடைந்தவர்கள் அங்குள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, அந்தப் பகுதியிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இத் தாக்குதலுக்கு பாகிஸ்தானிய தாலிபான்களின் ஒரு பிரிவினர் பொறுப்பேற்றுள்ளனர்.
லாகூர் நகரிலுள்ள கிறிஸ்தவர்களை தெரிந்தே தாம் திட்டமிட்டு இலக்குவைத்து தாக்கியதாகவும் ஜமாத்-உல்-அஹ்ரார் அமைப்பின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.