துறைமுக அதிகார சபையில் பாரிய ஊழல் மோசடிகள் ஊழியர்கள் போராட்டம்

துறைமுக அதிகார சபையின் ஊழியர்கள் இன்று அதிகார சபையின் முன்றலில் பாரிய போராட்டமொன்றினை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த போராட்டத்தை துறைமுக அதிகார சபையும் அனைத்து ஊழியர்கள் சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் வழமையாக கிடைக்கும் சித்திரை புத்தாண்டுக்கான போனஸ் பணத்தொகையில் 8200 ரூபாவை குறைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

இதன் காரணமாக பல பிரச்சினைகளுக்கு தாம் முகம் கொடுக்க வேண்டியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் துறைமுக அதிகார சபையில் பல மோசடிகள் நடைபெறுவதாகவும் அவற்றை உடனடியாக நிறுத்துமாறும் போராட்டத்தில் ஈடுபட்டோர் வலியுறுத்தியுள்ளனர்.

துறைமுக அதிகார சபையில் அமைச்சர் மற்றும் சபையின் தலைவர் ஆகியோர் தமது உறவினர்களுக்கு சம்பள உயர்வுடன் தொழில்வாய்ப்பை வழங்குவதாகவும் அவர்கள் குற்றஞ்சுமத்தியுள்ளனர்.

இந்த போராட்டடத்தில் சுமார் 1000ற்கும் அதிகமானோர் கலந்து கொண்டுள்ளனர்.

இதேவேளை, பாதுகாப்பிற்காக பொலிஸாரும் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த போராட்டத்தின் காரணமாக புறக்கோட்டை பிரதான வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

அத்துடன் புறக்கோட்டையில் இருந்து மட்டக்குளி வரையான பாதை மூடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.