ஊடகவியலாளர்களுக்கு உரிய பயிற்சி கிடையாது

இலங்கை ஊடகவியலாளர்களுக்கு போதியளவு பயிற்சி கிடையாது என ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

காலி அலோசியஸ் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றின் பிரதம விருந்தினராக பங்கேற்ற போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

ஊடகத்துறை தொடர்பில் பாடசாலை மாணவர்கள் காண்பித்து வரும் அக்கறை எதிர்காலத்தை சிறந்த வகையில் அமைக்கும்.

ஊடகத்துறையில் காணப்படும் பிரதான பிரச்சினைகளில் ஒன்று போதியளவு பயிற்சி இன்மையாகும். சில வேளைகளில் நாம் உரையயொன்றை ஆற்றினால் மறுநாள் காலையில் முற்றிலும் மாறுப்பட்ட கருத்துக்களைக் கொண்ட செய்திகளை பத்திரிகையில் பார்க்க முடிகின்றது.

தனிப்பட்ட ரீதியில் எனக்கும் இந்த அனுபவம் உண்டு. ஒரு சொல்லை விட்டாலும் முழு அர்த்தமும் மாறிப் போகக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

ஊடகவியலாளர்களுக்கு பயிற்சி வழங்க சர்வதேச அளவிலான அகடமி ஒன்றை உருவாக்குவதற்கு நாம் உத்தேசித்துள்ளோம். சீனா போன்ற நாடுகள் இதற்கு உதவிகளை வழங்க முன்வந்துள்ளன.

நாட்டின் நாடாளுமன்றில் ஆற்றப்படும் உரைகளில் முக்கியமான அர்த்தமுள்ள உரைகள் வெளிப்படுத்தப்படுவதில்லை.

ஏதேனும் ஓர் உரையின் ஒரு பகுதி தெரிவு செய்யப்பட்டு ஒன்றிரண்டு வசனங்கள் மாத்திரம் போடப்படும், அல்லது ஏதேனும் அமளி நடந்திருந்தால் அதுதான் அடுத்த நாள் பத்திரிகைகளில் கொட்டை எழுத்தில் பிரசூரிக்கப்படுகின்றது.

இந்த நிலைமையில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டியது மிகவும் அவசியமானது என ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.