17 ஆயிரத்து 457 பேர் போதை பொருள்களுக்கு அடிமைகள்

இலங்கையில் 17 ஆயிரத்து 457 பேர் ஹொரொயின் உள்ளிட்ட போதைப் பொருள்களுக்கு அடிமையாகியுள்ளதாக  சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை,  வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது  ஐக்கிய தேசியக்கட்சியின் மாத்தறை  மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே  அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஹெரோயின் உள்ளிட்ட ஏனைய போதைப்பொருள்களுக்கு அடிமையாகியுள்ளவர்கள் தொடர்பாக தொகை மதிப்பீடொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதா? அவ்வாறாயின் அந்த எண்ணிக்கை எவ்வளவு? மேற்படி நபர்களில் எத்தனை பேர் எச்.ஐ.வி.தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர், போதைப்பொருள் பயன்படுத்துவோர் மற்றும் எச்.ஐ.வி உள்ளிட்ட சமூக நோய்கள் பரவுவதை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை என்ன? என புத்திய பத்திரண கேள்வியெழுப்பினார்.

அமைச்சர் ராஜித சேனாரட்ன மேலும் தெரிவிக்கையில்,

ஹெரோயின் உள்ளிட்ட ஏனைய போதைப் பொருள்களுக்கு அடிமையாகியுள்ளவர்கள் தொடர்பாக தொகை மதிப்பீடொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பாலேயே  இதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்படி  17 ஆயிரத்து 457 பேர் போதைப்பொருள்களுக்கு  அடிமையாகியுள்ளனர். இவர்களுள் 13 பேர் எச்.ஐ.வி. தொற்றுக்கு  உள்ளாகியுள்ளனர்.

போதைப்பொருள் பயன்படுத்துவோர் மற்றும் எச்.ஐ.வி. தொற்று உள்ளிட்ட சமூக  நோய்கள் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கு  அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. போதைப்பொருட்களை கட்டுப்பத்துவதற்கான நடவடிக்கைகள் சுகாதார அமைச்சின் கீழ் இல்லை என்றார்.