-விடிவெள்ளி ARA.Fareel-
நாட்டில் மக்கள் சிங்கள கிராமம், முஸ்லிம் கிராமம், தமிழ் கிராமம் என பிரிந்து வாழ்வதினாலேயே இன ரீதியிலான மோதல்கள் ஏற்படுகின்றன.
கல்ஹின்னை சம்பவமும் இதன் பின்னணியிலே இடம்பெற்றுள்ளது. எனவே இவ்வாறான சம்பவங்களைத் தவிர்ப்பதற்கு முஸ்லிம் கிராமங்களில் சிங்களவர்களும் சிங்கள கிராமங்களில் முஸ்லிம்களும் குடியேற்றப்பட வேண்டும் என சிங்ஹலே அமைப்பின் செயலாளர் மெதில்லே பஞ்சாலோக தேரர் தெரிவித்தார்.
கல்ஹின்னையில் இடம்பெற்ற சம்பவத்தினையடுத்து காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மூன்று பெரும்பான்மை இனத்தவர்களையும் சிங்ஹலே அமைப்பின் பிரதிநிதிகள் பார்வையிட்டனர்.
பின்பு இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே மெதில்லே பஞ்சாலோக தேரர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
“நாட்டில் நடைபெறுகின்ற இன ரீதியிலான மோதல்களுக்கு அரசாங்கமே பதில் கூற வேண்டும். இன நல்லிணக்கம் பற்றி பேசும் அரசு ஊடகங்கள் மூலமே நல்லிணக்கத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றன.
நல்லிணக்கத்தை ஊடகங்கள் மூலம் மாத்திரம் ஏற்படுத்தி விட முடியாது.
அளுத்கமையில் இடம்பெற்ற சம்பவம் பற்றி தொடர்ந்து பேசி வருகிறோம். ஆனால் அளுத்கம போன்ற சம்பவங்கள் மீண்டும் ஏற்படாதிருக்க எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
இதனாலேயே இன மோதல்கள் கல்ஹின்னையில் மாத்திரம் அல்ல மற்றும் பல இடங்களிலும் உருவாகின்றன.
இன்று நாட்டு மக்கள் இன ரீதியிலான வலயங்களாகப் பிரிந்து வாழ்கிறார்கள். வடக்கு, கிழக்கு என பிரித்து பேசுகிறார்கள்.
வடக்கில் தமிழர்களும் கிழக்கில் முஸ்லிம்களும் வாழ்கிறார்கள். தெற்கில் சிங்களவர் தமிழர் முஸ்லிம்கள் என்று இணைந்து வாழ முடியுமென்றால் கொழும்பு போன்ற நகரங்களில் எல்லா இனமக்களும் வாழ முடியுமென்றால் ஏன் வடக்கு கிழக்கில் வாழ முடியாது.
வடக்கிலும் கிழக்கிலும் சிங்களவர்கள் குடியேற்றப்பட வேண்டும். யாழ்ப்பாணத்தில் சிங்கள கிராமம் ஒன்று உள்ளது. அங்கு சிங்களவர்களும் தமிழர்களும் ஒற்றுமையாகவே வாழ்கிறார்கள். ஆனால் வடக்கிலுள்ள அரசியல்வாதிகளே அவர்களுக்கிடையிலான நல்லிணக்கத்தைச் சிதைக்கிறார்கள். வடக்கு முதலமைச்சரின் தமிழ் தீவிரவாதம் அங்குள்ள சிங்களவர்களுக்கு எதிராக அமைந்துள்ளது.
கல்ஹின்னை ஒரு முஸ்லிம் கிராமம் அங்கும்புர ஒரு சிங்கள பிரதேசம் இதனாலே அவர்கள் முரண்பட்டுக் கொள்கிறார்கள். இரு பிரதேசங்களிலும் இரு இனமக்களும் கலந்து வாழ்ந்தால் இப்பிரச்சினை ஏற்படாது. எனவே நல்லிணக்கத்தை உருவாக்க முயற்சிக்கும் ஆட்சியாளர்கள் திட்டமிட்டு செயற்பட வேண்டும்.
கல்ஹின்னையில் இடம்பெற்ற மோதல்களுக்கான காரணங்களை கண்டறிவதன் மூலமோ சம்பந்தப்பட்டவர்கள் நீதிமன்றத்தின் மூலம் தண்டிக்கப்படுவதினாலோ இரு சமூகங்களுக்கிடையே நல்லிணக்கம் ஏற்பட்டுவிடப் போவதில்லை.
இதன் மூலம் மேலும் குரோதங்களே வளர்க்கப்படும். எனவே அரசாங்கம் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு சரியான திட்டங்களை வகுக்க வேண்டும் என்றார்.