சிங்கள இனவாதிகளை திருப்திபடுத்த, மைத்திரி துடிக்கிறார் – சிராஸ் நூர்தீன்

பௌத்த வாக்குகளை பெற்று ஆட்சியை கைப்பற்ற சுதந்திரக் கட்சி திட்டமிடுவதாக கூறிய பிரபல சட்டத்தரணி சிராஸ் நூர்த்தீன் இந்த அரசாங்கம் முஸ்லிம்களுக்கு விரோதமாக செயற்படுவதாகவும் குற்றம் சுமத்தினார்.
இதுபற்றி பேசிய சிராஸ் மேலும் கூறியதாவது,
மஹிந்தவின் வழியில் மைத்திரி செல்கிறார். முன்னர் பண்டாhநாயக்காவும் இப்படிதான் செய்தார். அவர்கள் சகலரும் இறுதியில் மண் கவ்வினர். சிங்கள வாக்குகளை இலக்குவைப்பதற்காக இவர்கள் கைக்கொள்ளும் இந்த உபாயம் முஸ்லிம்களுக்கு பாதிப்பாக அமையும்.
சுதந்திரக் கட்சியை மீண்டும் பதவிக்கு கொண்டுவர மறைமுக காரியங்கள் நடக்கின்றன. அதனடிப்படையில் இனவாதிகளுடன் அரசாங்கம் கை கோர்த்துள்ளது. அவர்களை ஜனாதிபதி செயலகத்திற்கும், தனது வீட்டிற்கும் அழைத்து ஜனாதிபதி பேசுகிறார்.
இவ்வாறான நிலையில் முஸ்லிம் விரோதச் செயற்பாடுகளுக்கு எதிராக நாம் பொலிஸில் தொடர்ந்த வழக்குகள் கூட இழுத்தடிக்கப்படுகிறது.
குற்றம் சுமத்தப்பட்ட ஞானசார போன்றவர்கள் ஜனாதிபதின் செல்லப்பிள்ளையாக வலம் வரும்போது, பொலிஸாரினால் அவரை கைது செய்ய முடியுமா..? நீதிமன்றத்தினால் அவருக்கு தண்டனை  விதிக்க முடியமா..??
இப்படி நிலைமை நீடிக்கையில் இதனை எப்படி நல்லாட்சி என்பது. நல்லாட்சி என்ற பதம் தீர்ந்துபோய்விட்டது. அரசாங்கத்தின் செயற்பாடுகள் மைத்திரியின் நடவடிக்கைகளை நோக்குகையில் முஸ்லிம்கள் நம்பிக்கையற்று காணப்படுகின்றனர். இதனால் முஸ்லிம்கள் விரக்தியுறும் நிலைக்கு செல்வர். இது சமூகத்திற்கும், நாட்டிற்கும் உகந்ததல்ல. இந்நிலையை சம்பந்தப்பட்டவர்கள் அவசரமாகவும், அவசியமாகவும் உணர்ந்துகொள்ள வேண்டும்  எனவும் சிராஸ் நூர்தீன் மேலும் குறிப்பிட்டார்.