மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பிரதேசத்திற்கான பொலிஸ் நிலையத்திற்கான நிறந்தர கட்டிடம் இன்று சனிக்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர தலைமையில் நடைபெற்ற திறப்பு விழா நிகழ்விற்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஷீர் அஹமட், கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான கே..கருணாகரம், எம்.நடராஜா, ஜி.கிருஸ்ணப்பிள்ளை பொலிஸ் உயர் அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

ஒரு கோடியே பத்து இலட்சம் ரூபா செலவில் இரண்டு ஹெக்டேயர் நிலப்பரப்பில் பிரதான கட்டிடதொகுதி, நிலைய பொறுப்பதிகாரி அலுவலகம், ஆயுதகளஞ்சியம், கடமை உத்தியோகத்தர் அலுவலகம், தொலைபேசி இயக்குனர் அலுவலகம், இரு சிறைக்கூடங்கள், தனி பொலிஸ் அலுவலர்களுக்கான விடுதி என்பன அமைக்கப்பட்டுள்ளது.

வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மண்டூர் பாலமுனை பிரதேசத்தில் பொது மக்களின் பதிநான்கு வீடுகளில் தற்காலிகமாக இயங்கிவந்த பொலிஸ் நிலையம் புதிய கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (01.08.2017) பொலிஸ் நிலையம் இயங்கி வந்த வீடுகள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ஜாக்கொட ஆராய்ச்சி தெரிவித்தார்.