Breaking
Thu. May 9th, 2024

அருள் நிறைந்த ரமழானின் பாக்கியங்களை அடையும் சந்தர்ப்பத்தை எல்லாம் வல்ல அல்லாஹுத்தஆலா சகலருக்கும் வழங்க வேண்டுமென பிரார்த்திப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

புனித ரமழானை வரவேற்று அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,

“அல்லாஹ்வின் அருட்கடாட்சம் கிடைக்கும் புனிதமிக்க பெறுமதியான ரமழான் எம்மை நெருங்கியுள்ளது. இம்மாதத்தில் நல்லமல்கள் செய்து புனிதவான்களாக மாறுவதற்கு முயற்சிப்போம். அல்லாஹ்வுடன் நேரடியாக அடியானை இணைக்கும் ஆத்மீக உணர்வே நோன்பு. நோன்பாளியின் பிரார்த்தனைகள் வீண்போவதில்லை.

இன்னொரு சந்தர்ப்பத்துக்காக காத்திராமல் வந்துள்ள ரமழானை உச்சளவில் பயன்படுத்துவோம். இக்காலத்தில், நாம் செய்யும் நல்லமல்கள் சமூக ஐக்கியத்துக்கு கேடாகக் கூடாது. இதில், மிகக் கவனமாகச் செயலாற்ற வேண்டும். நோன்பு நோற்பது, திறப்பது எல்லாம் மிகச்சிறந்த நல்லமல்கள். இந்த நல்லமல்கள் பிறருக்கு பிரச்சினையாக அமையாமல், நாம் செயற்படுவது அவசியம். இஸ்லாமிய நெறிமுறைகள் சமூக ஐக்கியத்தை உருவாக்குவதை அடித்தளமாகக் கொண்டவை. இஸ்லாத்தின் இந்த இலட்சியத்திலிருந்து முஸ்லிம்கள் விலகிச் செயற்படக்கூடாது.

இக்காலத்தில் முஸ்லிம்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளிலிருந்து மீள நல்லமல்களூடாக நாம் பிரார்த்திப்போம். அன்பு, நல்லெண்ணம் உள்ள ஆட்சியாளர்களை ஏற்படுத்த நாங்கள்  எடுக்கும் அரசியல் பிரயத்தனங்கள் வெல்வதற்கு பிரார்த்தனைகளும் பிரதானமானவை. கடந்தகால அரசியலில் ஏற்பட்ட கசப்புகள் மீண்டும் ஏற்படக்கூடாது.

சமூக நோக்கிலான செயற்பாடுகளை முன்னெடுக்கும் பாக்கியத்துக்கு அல்லாஹ்வின் அருளை நாடி நிற்கிறோம். நிம்மதியாக நோன்பு நோற்று, அமைதியாக நோன்பு திறக்கும் சூழல் நாட்டில் ஏற்பட வேண்டும்.

முஸ்லிம் சகோதரர்கள் சகலரும் நோன்பின் மகிமையை அடைந்துகொள்ளும் பாக்கியம் கிடைப்பதற்கு அல்லாஹ்வை பிரார்த்திக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Post