Breaking
Mon. Apr 29th, 2024
மன்னார் வில்பத்து விவகாரம் மீண்டும் தலைதூக்கியுள்ள நிலையில், அது இன்று அரசியல் பிரச்சினையாக உருவாகியிருக்கிறது. கடந்த ஆட்சிக்காலத்தில் ஹலால் உணவில் ஆரம்பித்த பிரச்சினை படிப்படியாக நகர்ந்து சென்று இன்று மன்னார் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் கைவைக்கின்ற அளவுக்கு கைமீறிப் போயுள்ளது.
பொதுபலசேனா போன்ற சிங்கள கடும்போக்கு அமைப்புக்கள், அரசியல் கட்சிகள் என்பன அடிப்படையில் ஆதரமற்ற பிரச்சினைகளுக்குப் பின்னால் இருந்துகொண்டு செயற்பட்டது. இதற்கு ஒருசில சிங்கள ஊடகங்களையும் இவர்கள் பயன்படுத்தி வந்துள்ளார்கள்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்திலிருந்தே இந்த பிரச்சினை ஆரம்பித்தது. அதன் பின்னர் தெற்கு ஊடகவியலாளர்கள் குழுவினர் குறித்த பிரதேசத்திற்கு நேரில் விஜயம் செய்து நிலைமைகளை தெளிவாக விளங்கிக் கொண்டனர்.
எனினும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சியிலும் இந்தப்பிரச்சினை மீண்டும் தலைதூக்கியிருக்கிறது. திருகோணமலை மற்றும் சம்பூர் ஆகிய கிராமங்களை கடந்த அரசு முதலீட்டுப்பிரதேசங்களாக பிரகடனப்படுத்தியிருந்த நிலையில் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விஷேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் அந்தக்காணிகளை விடுவித்து உரியவர்களிடம் ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளார்.
அதுபோல மன்னார் மரிச்சிக்கட்டி கிராம மக்களின் நீண்ட கால பிரச்சினைக்கு விரைவில் உரிய தீர்வைப்பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதே எம் எல்லோரினதும் எரித்பார்ப்பாகும்.
சமூக உரிமைக்காக ஒன்றுபடுவோம்
1990ஆம் ஆண்டு வன்னியிலிருந்து விடுதலைப்புலிகள் இயக்கத்தினால் அவசரமாக வெளியேற்றப்பட்ட வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த முஸ்லிம் மக்கள் கடந்த 25 வருடங்களாக புத்தளம் போன்ற மாவட்டங்களில் வாழ்ந்து வந்துள்ளனர்.
எனினும் யுத்த நிறுத்தத்திற்குப் பினனர் அவர்கள் தமது சொந்த மண்ணில் வந்து வாழவேண்டும் என்று ஆசையுடன் அங்கு செ;னறால் தமது சொந்த மண்ணில் வாழ முடியாத நிலை காணப்பட்டது. காரணம் அன்று ஒரு இலட்சம் மக்களாக சென்றவர்கள் இன்று பல மடங்குகளாக அதிகரித்துள்ளமையாகும்.
எனவே, எல்லோரும் இருப்பதற்கு அங்கு காணியோ, விடோ இல்லை. எனவே, காணி, வீடு உள்ளவர்கள் தமது சொந்த மண்ணில் இருக்க ஏனையவர்கள் தாம் முன்னர் வாழ்ந்த மாவட்டத்திற்கே திரும்ப சென்று விட்டார்கள்.
காணிப்பிரச்சினை மன்னார் மாவட்ட மக்களுக்கு மாத்திரமின்றி, மூன்று மாவட்டத்தில் வாழும் முஸ்லிம் மக்களுக்கு உள்ளது. அதுமாத்திரமின்றி,காணியிருந்தும் சொந்த கிராமத்தில் வாழும் உரிமை மறுக்கப்பட்டு இன்று இனவாத கழுகுப் பார்வையில் மாட்டிக்கொண்டுள்ள மன்னார் முசலிப்பிரதேச மக்களின் உரிமைக்காக அனைவரும் வேறுபாடுகளை மறந்து செயற்பட வேண்டும் என்பதே எல்லோரினதும் எதிர்பார்பபாகும்.
பருவகால வியாபாரிகளைப் போல தேர்தல் காலங்களில் மாத்திரம் வந்து போகும் எண்ணங்களை மறந்து இது முஸ்லிம் சமூகத்தின் உரிமைப் பிரச்சினை. அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு மாத்திரம் கடமையல்ல. இது எல்லோருக்குமான பிரச்சினை என்ற உணர்வுடன் முஸ்லிம் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் கவனத்தில் எடுக்க வேண்டும்.
இன்று இலங்கை அரசியலில் முக்கிய அமைச்சராக இருக்கின்ற 60 இற்கும் மேற்பட்ட உறுப்பினர்களை வைத்து;ள ஒரு கட்சியின் தலைவரான வன்னி மக்களினால் தெரிவு செய்து பாராளுமன்றம் அனுப்பி வைக்கப்பட்ட அமைச்சர் ரிசாத் பதியுதீன் மீது உள்ள காழ்ப்புணர்வு காரணமாக இனவாத சக்திகள் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் காணிப்பிரச்சினையை பீதாகரமாகக் காண்பிக்க முயற்சிக்கிறார்கள். அவர்ளது தனிப்பட்ட காரணங்களுக்காக மக்களை பலிக்கடாவாக்க நினைப்பது எந்த வகையில் நியாயமாகும்.
மேடைகளில் தலமைத்துவம், ஒற்றுமை பற்றி முழங்க பேசும் மக்களினால் தெரிவு செய்யப்பட்டவர்கள் ஒருசில சந்தர்ப்பங்களில் கூட்டாக கோரிக்கையை முன்வைத்து அதில் எப்படி வெற்றியை காண்கிறார்களோ அதுபோல முப்பது வருடங்களுக்கும் மேலாக இழுபட்டுக்கொண்டிருக்கின்ற வன்னி முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம், காணிப்பிரச்சினை உள்ளிட்ட விடயங்களில் அக்கறையுடன் செயற்பட்டு முஸ்லிம்கள் மீது பலவந்தமாக திணிக்கப்படும் இனவாத அடக்குமுறைக்கு சாவுமணி அடிக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.
இவ்வாறான மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு மாற்றமாக தமது சொந்த அரசியல் நலனுக்காக காலத்தை கடத்தலாம் என்று எண்ணிக்கொண்டு தேர்தல் காலங்களில் மாத்திரம் எந்த முக்தைக்கொண்டு வன்னி முஸ்லிம்களிடம் வாக்கு கேட்கப் போகிறீர்கள்..?

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *