Breaking
Fri. May 17th, 2024

(ஏ.எஸ்.எம்.ஜாவித்) 

மன்னார் மாவட்டத்தின் வில்பத்து எல்லைக் கிராமமான சிலாவத்துறைப் பகுதியில் உள்ள மரிச்சிக்கட்டி, மேதரகம பகுதியை அண்டிய உப்பாறு உள்ளிட்ட கிராமப் பகுதியில் இன்று (13) இனவாத அமைப்புக்களான ராவணபலய, சிஹல உறுமைய மற்றும் ஜே.வி.பியின் பிக்குமார் உள்ளிட்ட குழுக்கள் சுமார் மூன்று நான்கு பேரூந்துகளில் சென்று அப்பகுதியைப் பார்வையிட்டதாகவும் இதன் காரணமாக அப்பகுதி மக்கள் அச்சத்தில் காணப்பட்தாக அங்கிருக்கும் மீள் குடியமர்ந்துள்ள மக்கள் தெரிவித்தனர்.

இவ்வாறு வந்தவர்கள் அப்பகுதி மக்களுடன் எந்தவிதச் சந்திப்புக்களையும் மேற்கொள்ள வில்லை என்றும் பார்வையிட்ட உடன் அவர்கள் திரும்பியதாகவும் பின்னர் கொக்குப்படையான் பகுதியில் அவர்கள் குழுமி இருந்ததாகவும் இதனால் அப்பகுதி தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் ஒருவித பதட்ட நிலையில் காணப்பட்டதாகவும்,

வந்தவர்கள் முஸ்லிம் பிரதேசங்களில் ‘அப்பய பூமி’ என்ற பெயர்ப்பலகைகளை இடுவதற்கு தயாராகி இருப்பதாகவும் இதன் காரணமாக சிலாவத்துறை பிரதேசச் செயலகப் பகுதி மக்களை அவர்கள் நிற்கும் பகுதிகளுக்குள் செல்லவிடாது பொலிஸார் தடைசெய்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. (செய்தி பிரசுரமாகும் வரை உள்ள தகவல்)

அப்பகுதி ஆசிரியர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில் அவர்கள் புத்தர் சிலைகளை வைப்பதற்கான ஒரு நடவடிக்கையாகவும் இருக்கலாம் என்றாலும் மீள்குடியேறிய மக்களை அப்பகுதியிலிருந்து விரட்டும் செயற்பாடுகளாகவே இதனை நோக்கப்படுகின்றது என்றார்.

இவ்வாறு இனவாத அமைப்புக்கள் பாதுகாப்புடன் கண்டித்தனமாக படையெடுத்து வருவதால் அப்பகுதி மக்கள் செய்வதறியாது பதட்ட நிலைமைகளுக்கு உள்ளாவதாகவும் இது ஒரு மனித உரிமை மீறலாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிப்பதுடன் இதனை ஜனாதிபதி தனது நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து தேவையற்றவர்களின் பிரசன்னங்களைக் குறைத்து மக்களை அமைதியாக வாழ விடுமாறு அப்பகுதி தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை இவர்களின் வருகையால் முசலி பிரதேசச் செயலாளர் அலுவலகத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்ததாகவும் அங்குள்ள அலுவலர்கள் தெரிவித்தனர்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *