தனியார் பாடசாலை மாணவர்கள் அரச பாடசாலைகளில் உயர்தரம் கற்கலாம்

தனியார் சர்வதேச பாடசாலைகளில் கல்வி பொதுதராதர சாதாரண தரத்தில் சித்தியெய்தியவர்களை அரசாங்க பாடசாலைகளில் கல்விப் பொதுத் தராதர உயர்தரத்துக்கு அனுமதிப்பது குறித்த சுற்று நிருபம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் குறித்த பிரச்சினை இந்த வாரத்தில் கடும் வாக்குவாதங்களுக்கு உட்படும் பிரச்சினையாக இருக்கும் என்று கல்வி அமைச்சின் தரப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன. இந்த சுற்று நிருபத்தை உடனடியாக அனுப்புமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தனவிற்கு கட்டளையிட்டுள்ளார்.

எனினும் கடந்த அமைச்சரவைக் கூட்டத்தின் போது பல அமைச்சர்கள் இந்த முனைப்புக்கு எதிர்ப்பை வெளிக்காட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஏற்கனவே தனியார் சர்வதேச பாடசாலைளின் சாதாரண தர மாணவர்கள் அரசாங்க பாடசாலைகளில் உயர்தரம் கற்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை சமர்ப்பித்தபோது அமைச்சர்கள்  எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து திரும்ப பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.