யுத்த வெற்றி விழா இனிமேல் கொண்டாடப்பட மாட்டாது!

யுத்த வெற்றி விழா கடந்த காலங்களில் இடம்பெற்றது போன்று இனிமேல் கொண்டாடப்பட மாட்டாது அதற்கு பதிலாக படைவீரர் ஞாபகார்த்த நிகழ்வு மற்றும் கலாச்சார வைபவம் மாத்திரமே இடம்பெறும் என்று பாதுகாப்புச் செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி தெரிவித்தார்.

யுத்தத்திற்கு பின்னர் நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள நல்லிணக்கத்தை கருத்திற் கொண்டே தற்போதைய அரசாங்கம் இந்த தீர்மானத்தை மேற்கொண்டு அதற்கான சகல ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். நாளை நடைபெறவுள்ள படைவீரர் ஞாபகார்த்த நிகழ்வு மற்றும் கலாச்சார வைபவம் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் விஷேட செய்தியாளர் மாநாடு பாதுகாப்பு அமைச்சின் எற்பாட்டில் அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர்கூடத்தில் நேற்று (16) இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே செயலாளர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

நாளை (18) மலை 4.00 மணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் பாராளுமன்றத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள படைவீரர் நினைவு தூபிக்கு அருகில் படைவீரர் ஞாபகார்த்த நிகழ்வும் அதனைத் தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு சுதந்திர சதுக்க வளாகத்தில் கலாச்சார வைபவமுமே இடம்பெறவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். யுத்தத்திற்கு பின்னர் ஆசிய பிராந்தியத்திலேயே பாதுகாப்பானதும், அமைதியானதுமான நாடாக தற்பொழுது நமது நாடு காணப்படுகின்றது.

இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதும் சகல இன மக்களும் தாம் இலங்கையர் என்ற நிலைமையை உருவாக்குவதுமே தற்போதைய அரசின் நோக்கமாகும். இராணுவம், கடற்படை, விமானப்படை, பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படைவீரர்களினதும் அவர்களது குடும்ப உறுப்பினர்களினதும் பங்கு பற்றுதலுடன் இந்த வைபவங்கள் இடம்பெறவுள்ளன. நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் நடைபெறவுள்ள இந்த கலாச்சார நிகழ்வில் 450 தொடக்கம் 500 கலைஞர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். அத்துடன் சகல பொது மக்களும் கண்டுளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் எவரும் தங்கு தடையின்றி கலந்து சிறப்பிக்க முடியும் என்றார்.

மேற்படி நிகழ்வுகளில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர்கள் மாகாண அமைச்சர்கள் அரசியல் பிரமுகர்கள் உட்பட முக்கியஸ்தர்கள் பலர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் (நிர்வாகம்) சரத் சந்திரசிறி வித்தான, பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி எயார் சீப் மார்ஷல் கோலித குணதிலக்க, கடற்படையின் பிரதம அதிகாரி ரியர் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்க, பாதுகாப்பு அமைச்சின் ஊடக மையத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் ஜயனாத் ஜயவீர, பொலிஸ் கலாச்சார பிரிவு பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பேராசிரியர் கருணாரத்ன பண்டார ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். nlk