ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் மஹிந்த பிரசன்னம்

– அலுவலக செய்தியாளர் –
பாரிய மோசடி மற்றும் ஊழல் விசாரணை பிரிவிற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ சற்று முன்னர் பிரசன்னமாகியுள்ளதாக எமது அலுவலக செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

சுயாதீன தொலைக்காட்சி சேவைக்கு ஜனாதிபதி தேர்தல் காலப் பகுதியின் போது விளம்பரம் செய்தமைக்கான கட்டணத்தை செலுத்தாமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதியிடம் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன்படி, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள பாரிய மோசடிகள் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு மஹிந்த ராஜபக்ஸ நேற்றைய தினம் அழைக்கப்பட்டிருந்தார்.

எனினும், நேற்றைய தினம் அவர் ஆணைக்குழு முன்னிலையில் பிரசன்னமாகவில்லை.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவும் ஆணைக்குழு முன்னிலையில் இன்று பிரசன்னமாகியுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

அத்துடன், சுயாதீன தொலைக்காட்சியின் பணிப்பாளரும் இன்றைய விசாரணைகளுக்காக பிரசன்னமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.