உலக சனத்தொகையில் 9 இல் 1 நபருக்கு அன்றாடம் தேவையான உணவு கிடைக்காமல் பட்டினியால் வாடுகின்றனர் என இன்று செவ்வாய்க்கிழமை ஐ.நா வெளியிட்ட வருடாந்த அறிக்கை தெரிவிக்கின்றது.
மேலும் உலகம் முழுதும் 805 மில்லியன் மக்கள் ‘chronic undernourishment’ எனும் வெகுநாள் பட்டினியால் அவதிப்பட்டு போசாக்குக் குறைபாடு உடையவர்களாக உள்ளனர் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
உணவுக் குறைபாடானது அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் அனுமதிக்க முடியாத அளவு அதிகமாக உள்ளது என்றும் ஐ.நா இன் உணவு மற்றும் விவசாயத்துக்கான அமைப்பு எச்சரித்துள்ளது. உதாரணமாக ஆப்பிரிக்காவின் துணை சஹாரா பாலைவன நாடுகளில் 4 இல் 1 நபருக்குப் போதுமான உணவு கிடைப்பதில்லை. மலாவியில் 5 வயதுக்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளிலும் அரைப்பங்கு குழந்தைகள் வயதுக்கேற்ற எடையைக் கொண்டிருப்பதில்லை. யேமென் நாட்டில் நிலமை இன்னமும் மோசம். அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத் தன்மை அற்ற காரணத்தாலும் வன்முறையாலும் யேமென் உலகின் மிக மோசமான வறிய நாடுகளில் ஒன்றாகத் திகழ்கின்றது.
உலகின் மிக அதிக சனத்தொகையையுடைய ஆசியாக் கண்டத்தில் 526 மில்லியன் மக்களுக்குப் போதுமான உணவு கிடைப்பதில்லை என்றும் கூறப்படுகின்றது. இருந்த போதும் 1990 ஆம் ஆண்டில் இருந்து உலகளாவிய ரீதியில் பட்டினியால் வாடும் மக்களின் எண்ணிக்கை 200 மில்லியனால் குறைந்திருப்பதாகவும் ஐ,நா இன் புள்ளி விபரம் கூறுகின்றது. ஆனால் இதனால் ஏற்பட்ட முன்னேற்றம் வெறுமனே கிழக்கு ஆசியா, தெற்கு ஆசியா, லத்தீன் அமெரிக்கா மற்றும் கரிபியன் ஆகிய குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டுமே நிகழ்ந்துள்ளது என்பதுடன் ஆப்பிரிக்கா இதில் அடங்கவில்லை என்பதுடன் இந்தோனேசியாவில் மட்டும் இந்த எண்ணிக்கையில் 1/2 பங்கு அதாவது 100 மில்லியன் தொகையால் பசியால் வாடுபவர்கள் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை உலகின் தற்போது அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் 2015 ஆம் ஆண்டுக்குள் உலகில் பசியால் வாடுபவர்கள் எண்ணிக்கையை 1/2 பங்கால் குறைப்பதில் தீவிரம் காட்டி வருவதாகவும் ஆனால் இதற்கு உலகத் தலைவர்கள் தமது அர்ப்பணிப்புக்களை அளிப்பதும் அவசியம் எனப்படுகின்றது. இந்நிலையில் பட்டினிக்கு எதிரான யுத்தத்தை நிச்சயம் வெற்றி கொள்ள முடியும் என்பதற்கு உலகத் தலைவர்களின் இம்முயற்சி ஓர் சான்று என்று தெரிவித்துள்ள குறித்த அறிக்கை சர்வதேச சமூகம் இதற்கு நிச்சயம் தனது பங்கை வழங்கும் என நம்பிக்கையும் தெரிவித்துள்ளது.
அடுத்த மாதம் ரோமில் உணவு மற்றும் போசாக்கு குறித்த முக்கிய மாநாடு ஒன்று நடைபெறவுள்ள நிலையில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

