பாரம்பரியமாக வில்பத்தை அண்டிவாழ்ந்த முஸ்லிம் மக்களுக்கு நீதி வேண்டி சாய்ந்தமருதில் கவனஈர்ப்புப் போராட்டம்

-எம்.வை.அமீர் –

வில்பத்து காட்டுப்பகுதியை அண்டிவாழ்ந்த முஸ்லிம் மக்களை மீள்குடியேற்றக் கோரியும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் வர்த்தக கைத்தொழில் அமைச்சருமான றிஷாத் பதியூதீன் அவர்களது செயற்பாடுகளுக்கு ஆதரவு தெரிவித்தும் 2015-05-29ல் சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் முன்பாக கவனஈர்ப்புப் போராட்டம் ஒன்று இடம்பெற்றது.

கல்முனை மாநகரசபையின் முன்னாள் முதல்வரும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசிய பிரதி அமைப்பாளருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் அவர்களது தலைமையில் இடம்பெற்ற மேற்படி கவனஈர்ப்புப் போராட்டத்தில் சாய்ந்தமருது பிரதேச அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் மருதூர் அன்சார் மற்றும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் நுகர்வோர் அதிகாரசபையின் தலைவருமான துல்சான்  உட்பட கட்சியின் உயர்மட்ட உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

இங்கு கருத்துத் தெரிவித்த முன்னாள் முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப், பலநூறு வருடங்களாக வில்பத்து காட்டுப்பகுதியை அண்டிவாழ்ந்த முஸ்லிம் மக்கள் நாட்டில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலையின் காரணமாக வெளியேற்றப்பட்டனர்.

நாட்டில் அமைதியான சூழ்நிலை மீண்டும் ஏற்பட்டுள்ள நிலையில் வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்கள் அவர்கள் காலம்காலமாக வாழ்ந்த இடங்களுக்கு குடியேற ஆரம்பித்துள்ள நிலையில் இனவாதிகளால் அவர்கள் வாழ்ந்த இடங்களில் குடியேறுவதற்கு தடைகள் விதிக்கப்பட்டுவருகின்றன.

குறித்த மக்களின் மீள்குடியேற்ற விடயத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் வர்த்தக கைத்தொழில் அமைச்சருமான றிஷாத் பதியூதீன் அவர்கள் முழுமூச்சாக இயங்கிவரும் இவ்வேளையில் அமைச்சர் றிஷாத் பதியூதீன் அவர்களுக்கு எதிராக இனவாதிகளால் தடைகள் விதிக்கப்படுவதாகவும் இவ்வாறான இனவாதிகளின் செயற்பாடுகளை கண்டிப்பதாகவும் தெரிவித்தார்.

வில்பத்து காட்டுப்பகுதியை அண்டிவாழ்ந்த முஸ்லிம் மக்களின்  மீள்குடியேற்ற விடயத்தில் அமைச்சர் றிஷாத் பதியூதீன் அவர்களைத்தவிர ஏனைய முஸ்லிம் அரசியல் வாதிகள் தங்களது மௌனங்களைக் கலைக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இங்கு வில்பத்து முஸ்லிம்களுக்கு ஆதரவான பல்வேறு பதாதைகளை தாங்கியவாறு மக்கள் அமைதியாக கவனஈர்ப்புப் போராட்டத்தை மேற்கொண்டனர்.