Breaking
Fri. Dec 5th, 2025
இலங்கையில் வேகமாக பரவி வருகின்ற இஸ்லாமியக் கோட்பாடுகளுக்கு அமைய நடத்தப்படும் ஷரியா வங்கி முறையை தடை செய்ய வேண்டுமென பொதுபல சேனா அமைப்பு இலங்கை மத்திய வங்கியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பின் போது அந்த அமைப்பின் தலைவர் திலந்த வித்தானகே இதனைத் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமியக் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட ஷரியா வங்கி இலங்கையில் வேகமாக பரவி வருகின்றதாக கூறிய வித்தானகே இதனை தடுப்பதற்கு அரசாங்கம் தவறியுள்ளதாக குற்றம் சாட்டினார்.
பொருளாதார நடவடிக்கைகளுக்கு மத நம்பிக்கைகளை சம்பந்தப்படுத்துவதை அனுமதிக்க முடியாதென்றும் இதன் முலம் ஒற்றுமைக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் அவர் கூறினார்.
இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடு என்ற காரணத்தினால் இவ்வாறான திட்டங்களை தடை செய்யுமாறு தனது அமைப்பு அரசாங்கத்திடம் பலமுறை வேண்டுகோள் விடுத்த போதிலும் அவர்கள் அதனை கவனத்திற்கு எடுத்துக் கொள்ளவில்லை என்றும் அவர் கூறினார்.
இலங்கை மத்திய வங்கி மற்றும் அரசாங்கம் ஷரியா வங்கிகள் தொடர்ப்பாக தனது நிலைப்பாட்டை பகிரங்கமாக அறிவிக்க வேண்டுமென்றும் அவர் கூறினார்.
இது சம்பந்தமாக விரைவில் இலங்கை மத்திய வங்கியினரை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தப் போவதாகவும் அவர் கூறினார்.
கடனுக்கு வட்டி வாங்குவது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் ஷரியா சட்டத்துக்கேற்ப நடக்கும் வங்கிகள் பல நாடுகளில் தற்போது ஆரம்பிக்கப்பட்டு வருகின்றன.

Related Post